தமிழ்நாட்டின் மையப்பகுதியான நம் திருச்சி மாவட்டம் பல்வேறு சிறப்புக்களை பெற்றுள்ளது. வரலாற்றின் பல தடயங்கள் திருச்சியைச் சுற்றி கிடைக்கின்றன. கீழடி ஆராய்ச்சிக்குப் பின் தமிழ்நாட்டின் வரலாற்றுத் தகவல்கள் இன்னும் வியப்புற வைக்கின்றன. ஆதிச்சநல்லூர் தடயங்களும் தமிழர்களின் வரலாற்றுக்கு ஓர் முக்கிய சான்றாகும்.
திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் பற்றிய வரலாற்றுத் தகவல்களை சோழமண்டல வரலாற்றுத் தேடல்குழுவின் மரு. உதய் சங்கர் மற்றும் ஆண்டவர் கனி மூலம் தெரிந்து கொண்ட போது வியப்பான தகவல்கள் கிடைத்தன. திருச்சி தொல்லியல் வட்ட அலுவலகத்தின் கீழ் பல தொல்லியல் தலங்கள் உள்ளன, அவற்றுள் ஒன்றான செங்களூர் பற்றி ஆற்றுப்படையைச் சார்ந்த திருச்சி பார்த்தி அவர்கள் கூறக் கேட்டு ஆச்சர்யமுற்றேன்.
செங்களூர் பற்றி மேலும் சில தகவல்களை திருச்சியின் சுற்றுலா அதிகாரி திரு. வில்சன் அவர்களும் கூறினார். பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கிடைக்கும் செங்களூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடமாகும். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கல்திட்டைகளை நாம் செங்களூரில் காணலாம். இறந்தவர்களின் நினைவுச்சின்னமாக வைக்கப்படும் கல்திட்டைகளை தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது.
செங்களூரில் 2010ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நூற்றுக்கணக்கான கண்ணாடி மணிகள், அரைகுறை கற்கள் மற்றும் டெரகோட்டாவால் செய்யப்பட்ட மணிகள், துண்டு துண்டான வளையல்கள், கிராஃபிட்டி அடையாளங்களுடன் கூடிய பானை மந்தைகள் ஆகியவை கிடைத்துள்ளன. ஒரு அரிய தங்கப் படலம், இரண்டு புஷ்பராகம் கற்கள் மற்றும் ஒன்பது கார்னிலியன் கற்கள் ஆகியவை இந்த தளத்தில் உள்ள முக்கியமான அகழ்வாராய்ச்சிகளில் சில.
அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர் டி.தயாளன் அவர்கள், செங்களூரில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் குறித்தும், ஆராய்ச்சியின் பரப்பளவான சுமார் 20 ஹெக்டேர் குறித்தும் கூறினார். மேலும், பெருங்கற்கால செங்களூர் கிராமத்தின் கல்வட்டங்களின் சிறப்பு அம்சம் குறித்து அவர் கூறும்பொழுது புதைக்கப்பட்ட கடந்த கால மக்களின் பொறியியல் திறன் மற்றும் இறந்தவர்களுக்கு அவர்களின் மகிமை மற்றும் மரியாதை ஆகிய இரண்டிற்கும் புதைகுழிகள் சாட்சியமளிக்கின்றன. என கூறியது The Hindu ஆங்கில செய்தித் தாள் உட்பட பல செய்தித் தாள்களில் பதியப்பட்டுள்ளது.
மெகாலிதிக் நினைவுச் சின்னங்களில் கிரானைட் ஸ்லாப் கற்கள் இருப்பது அருகிலுள்ள கிராமத்தில் கிரானைட் கிடைப்பதைக் குறிக்கிறது. கிரானைட் பாறையின் அடிப்பகுதியில், பழங்கால மக்கள் அரை வட்ட வடிவ பாதையை செதுக்கியுள்ளனர். அதன் மூலம் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்திருந்தனர். “இந்த இடத்தில் குறைந்தது 300 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது முழு தென்னிந்தியாவிலும் ஒரு அரிய அம்சம்” என்கிறார் டாக்டர் தயாளன்.
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்கள் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் புகைப்படம் எடுத்த பிறகு மீண்டும் பூமியால் நிரப்பப்பட்டன. என உதவி தொல்லியல் ஆய்வாளர் அ.அனில்குமார் கூறினார். பெருங்கற்காலப் பொருட்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். ஆராய்ச்சி நடந்து 14 ஆண்டுகள் ஆகியும் இந்த அரிய தகவல் பலரைச் சென்றடையவில்லை. நாமும் நம் பகுதியைக் குறித்து நம் மக்களுக்கும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் எடுத்துச் சொல்லும் கடமை உள்ளது.
இந்த கிராமம் திருச்சியிலிருந்து 36 கிமீ தொலைவில் உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து செங்களூர் செல்கிறது. புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குட்பட்ட செங்களூர் செல்ல துவாக்குடி, அரசூர் தாண்டி செல்லலாம். மலைக்கோட்டை மாநகர் திருச்சிக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழைமை வாயந்த கல்திட்டைகள் இருப்பது நம் திருச்சியின் வரலாற்றைப் பறைசாற்றுகிறது. திருச்சியின் பெருமையை உலகறியச் செய்வோம்.
தொகுப்பாளர் – தமிழூர் கபிலன்
படங்கள் நன்றி – பல்வேறு இணைய தளங்கள்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments