Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு

திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இனாம் குளத்தூர் என்னும் மிகப்பழமையான ஊர். இவ்வூர் பழமையில் கிருட்டிண சமுத்திரம் என்றும் பின்னர் வெள்ளாங்குளத்தூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இனாம்தாரர்கள் வருகைக்குப் பின்னர் இவ்வூர் ‘இனாம்குளத்தூர்’ என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இவ்வூர்   குளக்கரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலுக்கு இடப்புறத்தில் 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும், 0.75 அடி கணமும் உடைய பலகைக் கல் ஒன்றில் வில்லியாரின் புடைப்புச் சிற்பமுடைய வீரக்கல் ஒன்று நிறுவப்பட்டுள்ளதை தொல்லியல் ஆய்வாளர் பாலா பாரதி கண்டுபிடித்துள்ளார். 

அது பற்றி அவர் கூறுகையில்.. வாரி முடித்த கொண்டையும், காதணியும், கழுத்தணியும், முன்கரங்களில் கடகவளையும்,  பின் கரங்கள் கால்கள் ஆகியவற்றில் காப்பும், இடுப்பில் அரைப்பட்டிகையும், குறுவாளும் அணிந்து இடக்கரத்தில் வில்லையும், வலக்கரத்தில் அம்பையும், நாணையும் இணைத்துப் பிடித்து இழுத்து எதிரியை அம்பு எய்திக் தாக்கும் படியாக இடக்காலை முன்பக்கமாக நீட்டியும் வலக்காலை பின்பக்கமாக நீட்டிவாறும் வில்லியாரின் வீரக் கோலத்தை இந்தப் புடைப்புச் சிற்பம் சுட்டிக் காட்டுகிறது.    

இந்த வில்லியாரின் உருவத்தை வில்லுக்காரன் என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவ்வூரில் வாழ்ந்த ஒரு பிரிவினர் தற்போது தோகமலை வாழை ஆராய்ச்சி மையம் அருகிலுள்ள இனாம்புலியூருக்கு புலம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இக்கல்லை வழிபாடு செய்து வரும் செய்தி ஊர் மக்கள் வாயிலாக அறியமுடிகிறது. 

தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியம் – பொருளதிகாரம் – வெட்சித்திணை 1.5. இல் வீரக்கல் என்னும் நடுகல் நடுவதைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. சங்க கால இலக்கிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் வீரக்கல் என்னும் நடுகல் நடுவதைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுப் பொறிப்புகள் ஏதும் இல்லாத இந்த வீரக்கல் என்னும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள வில்லியாரின் உருவ அமைப்பின் அடிப்படையில் இக் கல் நிறுவப்பட்டக் காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதலாம் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *