Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி, தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மற்றும் வாஸன் கண் மருத்துவமனை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம்  இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை  முகாமினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி தலைமையேற்று இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து பேசுகையில்… உடல் உறுப்புகளின் பாதுகாப்பில் கண் நலம் மிக முக்கியம்.

இன்றைய நவீன வாழ்க்கை சூழலால் குழந்தைப் பருவத்திலேயே கண் பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேநேரம், கண்ணில் ஏற்படும் பல பாதிப்புகளைக் குழந்தைப் பருவத்திலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றால்தான் முழுமையாகக் குணப்படுத்த முடியும். தமிழக அரசும் மாணவர்களுக்கு கண் குறைபாடுகளை கண்டறிந்து இலவச கண் கண்ணாடிகளை வழங்கி வருகிறது.  காரட், பீட்ரூட், வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, அரைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, சிறு கீரை உள்ளிட்ட அனைத்துக் கீரைகள், ஆப்பிள், மஞ்சள் நிறப் பழங்கள், மீன் போன்ற வைட்டமின் ஏ மிகுந்த உணவைக் குழந்தைப் பருவத்திலிருந்தே சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், கண் பார்வையை நீண்ட காலம் பாதுகாக்க முடியும் என்றார்.

தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் முன்னிலையில் புத்தூர் கிளை நூலகர் புகழேந்தி, கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் கண் மருத்துவர் கூறுகையில்… நடுத்தர வயதினருக்கு நீரிழிவு நோய் காரணமாகக் கண்புரை, விழித்திரை பாதிப்பு, கண் நீர்அழுத்த நோய் எனப் பலதரப்பட்ட நோய்கள் தாக்கிப் பார்வையைப் பறிக்கின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையான கண் பரிசோதனைகள் அவசியம். பார்வையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடு பரிசோதனை, கண்புரை  (Cataract) பரிசோதனை, மாறு கண் பரிசோதனை, 

விழித்திரைப்  (Retina Test) பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, தூரப்பார்வைக் குறைபாடு, நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் இதைத் தவறாமல் செய்து கொள்ள வேண்டும். இதில் விழித்திரை மற்றும் கண் நரம்புகள் பரிசோதிக்கப்பட்டுக் கூடுதல் பாதிப்புகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கப்படும். பார்வை நரம்பு மேன்மேலும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

கண் நீர்அழுத்தப் பரிசோதனை (Intra Ocular Pressure Test) விழி அழுத்தமானி (Tonometer) எனும் கருவியைக் கொண்டு கண்ணின் அழுத்தத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதன் இயல்பு அளவு 20 மி.மீ. மெர்குரி. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறை இதைச் செய்துகொள்வது நல்லது. இதன்மூலம் குளுக்கோமா நோய் உள்ளதா என்பதை அறியலாம்.

ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்தால், அது மேன்மேலும் அதிகரிப்பதைத் தடுத்துவிட முடியும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு ஒருமுறை கண் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. காரணம், குழந்தையின் கவனக்குறைவு, பார்வைக் குறைபாட்டாலும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஏழு வயதுவரை குழந்தையின் கண் வளர்ச்சி வேகமாக இருக்கும். கண்ணில் உள்ள குறைபாடுகளை இந்த வயதுக்குள் கண்டறிந்து சிகிச்சை பெற்றுவிட்டால் நல்லது. அதற்கடுத்த வயதுகளில் சில கண் நோய்களை முழுவதுமாகச் சரிப்படுத்த முடியாது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தையின் கண் நலனுக்காக, 9-வது மாதத்திலிருந்து மூன்று வயதுவரை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை வைட்டமின் ஏ சொட்டு மருந்தை வாய்வழி போட்டுக்கொள்வது அவசியம். இது எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகப் போடப்படுகிறது. பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்க இது உதவும். இருசக்கர வாகனங்களில் செல்வோருக்குக் கண்களில் வறண்ட காற்று, சிறு தூசுகள் தொடர்ந்து படும்போது, விழி வெண்படலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்கத் தரமான கூலிங் கிளாஸ் மற்றும் ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம். கணினித் திரையைத் தொடர்ந்து பார்க்கும் போதும் இதே பிரச்சினை வரும். இதைத் தவிர்க்க 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கணினியிலிருந்து பார்வையை விலக்கி, தூரமான பொருட்களைப் பார்ப்பது நல்லது அல்லது அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பது என்று பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கண் சிவத்தல், எரிச்சல், உறுத்தல் போன்ற எந்தப் பிரச்சினைக்கும் சுயமருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து வயதினருக்கும் கண் பரிசோதனை அவசியம். நீரிழிவு நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனக்கூறினர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *