திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நூல் பல கல் செய்தி மடல் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் புத்தூர் வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் பேசுகையில், புத்தகங்கள் நமது ஒப்பற்ற ஆசானாக செயல்படுகின்றன. நல்ல நூல்களே நல்ல நண்பர்கள். அவ்வகையில் திருச்சி புத்தூர் கிளை நூலகவாசகர் வட்டம் நூலகச் செயல்பாடுகளினை நூல் செய்திமடலாக வெளியிட்டுள்ளது.
இளம் தலைமுறையினர்க்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல். அனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல். தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல். குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல். நடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல். அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கலாச்சாரம், பண்பாடு, கல்வி சார்ந்த செயல்பாடுகளினை நூலக வாசகர் வட்டம் செயல்படுத்தி வருகிறது என்றார்.
நூல் பல கல் செய்தி மடலை புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வெளியிட திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் பெற்றுக்கொண்டார். திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் நன்மாறன், ஆலோசகர் முனைவர் அருணாச்சலம், லால்குடி முருகானந்தம், மாரிமுத்து, முனைவர் செயலாவதி, மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments