Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.வரதராஜபெருமாள், 2.ஸ்ரீதேவி, 3.பூதேவி மற்றும் 4.ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக செந்துறை காவல் நிலையத்தில் 2012ம் ஆண்டு செந்துறை காவல் நிலைய குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை முடிவில் கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவுப்படி இவ்வழக்கின் புலன்விசாரணை சிலைதிருட்டு தடுப்புப் பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கினை புலன்விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிலைதிருட்டு தடுப்பு பிரிவானது, பல வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தின் வலைதளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு சிலைகளோடு, இக்கோயிலில் இருந்து திருடப்பட்ட 4 சிலைகளை ஒப்பீடு செய்து பார்த்தபோது, மேற்படி கோயிலில் களவாடப்பட்ட 4 சிலைகளில் ஒன்றான ஆஞ்சநேயர் சிலையானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததும், அங்கிருந்து ஏலம் விடப்பட்டதும் தெரியவந்தது. மேற்படி ஆஞ்சநேயர் சிலையானது ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

மேற்படி கோயிலுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தை கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்துடன் தொல்லியல்துறை நிபுணர்களின் உதவியோடு ஒப்பீடு செய்துபார்த்தபோது இரண்டு புகைப்படங்களிலும் உள்ள ஆஞ்நேயர் உலோக சிலையும் ஒன்றுதான் என்பது உறுதியானது. மேற்படி சிலையானது வெள்ளூர் அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்பதை நிரூபணம் செய்த சிலைதிருட்டு தடுப்பு பிரிவானது, அந்த சிலையை மீட்பதற்கு காவல்துறை தலைமை இயக்குநர் மூலமாக, தமிழ்நாடு அரசின் உள்துறைக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியது.

சிலைதிருட்டு தடுப்பு பிரிவு மேற்கொண்ட தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்படி ஆஞ்சநேயர் சிலையினை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்த அந்த தனிநபர் அந்த ஆஞ்நேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலமாக இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துவிட்டார். தொடர்ந்து இந்திய அரசின் உள்துறை, தமிழ்நாடு அரசின் உள்துறை மற்றும் இந்திய தொல்லியல்துறை ஆகியோர் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளால் ஆஸ்திரேலியாவில் இருந்த ஆஞ்சநேயர் சிலையானது, ஏஜென்சிகளின் பரிசோதனைக்கு பிறகு இந்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆஞ்சநேயர் சிலையானது புதுடெல்லியில் உள்ள இந்திய தொல்லியல்துறையிடம் இருந்து சிலைதிருட்டு தடுப்பு பிரிவால் பெறப்பட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்வழக்கில் மேற்படி ஆஞ்சநேயர் உலோக சிலையை இந்தியாவிற்கு மீட்டெடுத்து வருவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த காவல்அதிகாரிகள் அனைவரையும் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *