Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

12 மரங்களுக்கு உயிர் கொடுத்த திருச்சி ஆட்சியர்

மரங்கள் மனித வாழ்வியலின் ஆணிவேர். நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் இயற்கையின் கொடை. நாம் வாழும் சூழலை தீர்மானிப்பவை இம்மரங்களே! இவ்வுலகில் ஓரறிவு தொடங்கி ஆறறிவு மனிதன் வரை வாழ்வதற்கு ஏற்ப தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவை மரங்கள் தான்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் மனிதனின் தேவைகளுக்காக ஒரு இடத்தை கைப்பற்றும் பொழுது அவ்விடத்தில் உள்ள மரங்கள் அடியோடு வெட்டப்படுவது நம் அடுத்த தலைமுறையை வேரோடு அறுப்பதற்கு சமமாகி போகின்றது.

இத்தகைய சூழலை தவிர்ப்பதற்காகவும், மாற்று வழி ஏற்படுத்தும் வகையிலும் வேளாண் துறையினர் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு பல ஆண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மரத்தை வெட்டுவதை காட்டிலும், அதனை குறிப்பிட்ட முறையில் வேருடன் பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு அதற்கு உயிர் தர முடியும் என்ற தீர்வை கண்டுள்ளனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இட தேவைக்காகவும், வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பக்க நிலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்கு இருந்த வேம்பு, புளிய மரம் உள்ளிட்ட 10 மரங்கள் வேருடன் பிடுங்கி ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் திருச்சி மாவட்ட நிர்வாகத்தினர்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சங்கிலிகள் கட்டப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஜேசிபி உதவியுடன் அங்கு ஏற்கனவே தோண்டி தயாராக வைக்கப்பட்டுள்ள குழியில் நடப்பட்து.

இப்பணியில் ஈடுபட்டு வரும் திருச்சி குமுளூர், வேளாண் கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் விஜய் இது குறித்து கூறுகையில்… ஒரு மரத்தை நட்டு வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமன்று. மரங்கள் நம் வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்பதால், இதுபோன்ற வெட்டப்படும் மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு, வேர்களை செம்மைப்படுத்தி, மற்றொரு இடத்தில் நடுவதற்கான இடத்தை தயார் செய்து ஐந்துக்கு ஆறு என்ற அளவில் குழி தோண்டி நடலாம். 

மரங்கள் வெட்டப்பட்ட பகுதியில் பூஞ்சை கொல்லியை பயன்படுத்துவதால் பூஞ்சை உள்ளிட்ட பிற தாக்குதலிலிருந்து மரங்கள் பாதுகாக்கப்பட்டு செழுமையாக மீண்டும் வளரும் என தெரிவித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது பத்து மரங்கள் இவ்வாறு பிடுங்கப்பட்டு வேறொரு இடத்தில் மறு நடவு செய்யப்படுகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இம்மரங்களை பாதுகாப்பதற்கு இது போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக இடம் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, அங்கு இருக்கும் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி சாய்க்காமல், வேருடன் பிடுங்கி மறு நடவு செய்யும் பணியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முனைப்புடன் செயல்படுகிறார். இதுமட்டும் இன்றி பசுமை திட்டங்களான ஒரு கிராமம், ஒரு பண்ணையம் மற்றும் மியாவாக்கி காடுகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அந்த வரிசையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துள்ள இத்தகைய முயற்சி சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *