மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே நொச்சிமேடு பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி வீட்டில் 19 சவரன் நகை கொள்ளை, ரூ.10 ஆயிரம் பணம், இருச்சக்கர வாகனம் கொள்ளையடித்து சென்ற நபர்கள் குறித்து வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம்,மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் அருகே உள்ள நொச்சிமேடு சூசைமாணிக்கம் மனைவி ஜெயமேரி(68). இவர் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. இவருடன் மகன் ஜோசப் கின்ஸ்டன்(39) மனைவியுடன் வீட்டின் முன்பகுதியில் வசித்து வருகிறார்.
வழக்கம்போல் அருகிலுள்ள கால்நடைகள் வளர்த்து வரும் குடியிருப்புக்கு ஜோசப் கின்ஸ்டன் தனது மனைவியுடன் சென்றுவிட்டார்.
வீடுதிரும்பிய ஜோசப் கின்ஸ்டன் வீடு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கள்ள சாவிகளை கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவினையும் திறந்து அதிலிருந்த 19 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருச்சக்கர வாகனத்தையும் காணவில்லை. இதுகுறித்து ஜெயமேரி அளித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான போலீஸார், கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் வல்லுநர்கள், மோப்ப நாய் லிலீ ஆகியோரைக்கொண்டு தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வரு கின்றனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments