திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் பிள்ளை மனைவி அன்னபூரணி (75). இவர் இன்று அதிகாலை பேருந்து மூலம் சமயபுரம் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கும்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி காணவில்லை. இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், சமயபுரம் ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அன்னபூரணியுடன் பேருந்தில் பயணித்த போது அவருடன் அருகில் அமர்ந்தவர்களை போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் தகவல் தெரிவித்தனர்.
அப்போது மூதாட்டி அருகில் அமர்ந்திருந்த காளியம்மாள் என்பவரின் புகைப்படத்தை FRS ஆப் மூலம் சோதனை செய்தபோது காளியம்மாள் என்பவர் ரேகா என் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரது செல்போனை ஜிபிஎஸ் மூலம் ஆராய்ந்து போது தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, கோவை, திருவாரூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவரம்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை செய்த போது திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, திருவரம்பூர், சமயபுரம் பகுதிகளில் ஏற்கனவே நடந்த திருட்டுகள் தொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது மேற்படி நபர்கள் இந்த பகுதியில் திருடியது தெரிய வந்தது.
மேலும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட வேலு மனைவி காளியம்மாள் (43) திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சேர்ந்தவர் என்பதும், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி கல்பனா (43) என்பதும் அவர்கள் திருடும் நகைகளை விற்க மற்றும் சொத்துக்கள் வாங்க உதவியாக இருந்த திருச்சி அரியமங்கலம் கோல குடிப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் சரவணன் (44) என்பதும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் சரத்குமார் (26) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது கடந்த 15 வருடங்களாக காளியம்மாள் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இவர்களை கைது செய்ய முடியவில்லை என்பதும், இவரது மகனை ஆந்திர மாநிலம் சித்தூரில் வழக்கறிஞர் படிக்க வைத்து வருவதாகவும், அவரது ஒரு மகனை திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கூனம்பழம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்து உள்ளதும், இவர்களுக்கு சொந்தமாக திருப்பூர் மற்றும் மகாராஷ்டிரா, மும்பை போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் திருடிய நகைகளை கொண்டு திருச்சி, திருப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அந்த சொத்து பத்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சொத்துக்களை வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்கள் போலீஸ் விசாரணையில் காட்டாததால் திருட்டுத் தொழிலின் கிடைத்த நகை மற்றும் பணத்தினை கொண்டு இந்த சொத்துக்கள் வாங்கி உள்ளதால் அந்த சொத்துக்கள் பத்திரங்களையும், திருடி வைத்திருந்த 58 பவுன் தங்க நகைகள், அரை கிலோ தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். காளியம்மாள், கல்பனா, சரவணன், சரத்குமார் ஆகிய நால்வர் மீதும் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு கும்பலோடு மற்றவர்கள் ஏதும் தொடர்பு உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக திருட்டு வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்வது இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments