Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவிரி இலக்கியத் திருவிழா – 2024 – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர்

திருச்சிராப்பள்ளி ஹோலிகிராஸ் கல்லூரியில் இன்று (23.02.2024) பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற காவிரி இலக்கியத் திருவிழா -2024 விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காவிரி இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழாப்பேருரையாற்றினார். இந்நிகழ்வில், பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, அருட்சகோதரி முனைவர் பா.ராஜகுமாரி, மண்டலத்தலைவர் மதிவாணன், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில்….. காவிரி என்றாலே ஆறு, நீர் பங்கீடு பிரச்சனை என்பது பற்றிதான் நமது நினைவிற்கு வரும். ஆனால் தமிழர்களின் பண்பாட்டுத் தடத்தை உருவாக்கியதில் காவிரி பெரும்பங்கு வகிக்கிறது. பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம், அகநானூறு போன்ற தமிழர்களின் பழம்பெருமை இலக்கியங்களில் காவிரியின் பெருமைகளைப் போற்றி பாடியுள்ளார்கள். ஒளவையார், ஒட்டக்கூத்தர் என சங்ககால எழுத்தாளர்களும் காவிரியின் புகழ்ப் பாடியுள்ளார்கள். அன்று தொடங்கிய புகழ்மாலை இன்றைய நவீன எழுத்தாளர்கள் வரை காவிரியின் பெருமையை பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

காவிரி கலை இலக்கியம் காவிரி கடலில் கலப்பதற்கு முன்பாகவே அது ஓடும் வழியெங்கும் இலக்கியங்களையும், கலைகளையும் வளர்த்துவிட்டு செல்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல காவிரி உருவாகும் கர்நாடகத்திலும் கலைகளை வளர்த்தது காவிரிதான் என்கிறார்கள். காவிரிக் கரை எழுத்தாளர்களே கன்னட இலக்கியத்தின் முன்னோடிகளாகத் திகழ்கின்றார்கள். காவிரிக்கு இருக்கக் கூடிய இன்னொரு பெருமை அவள் பெண் என்பது! ஆமாம் தமிழர்கள் அந்த நதியை பெண்ணாகத்தான் உருவகம் செய்து வைத்துள்ளார்கள். அந்தத் தொன்மம்தான் இன்று ‘காவிரித்தாய்’ என மக்களை அழைக்க வைக்கின்றது.

எழுத்தாளர்கள் என்பவர்கள் வெறுமனே கதை சொல்லிகள் அல்ல. அவர்கள் சமூக மாற்றத்திற்கு வித்திடுபவர்கள் என நம்பக்கூடிய இயக்கத்தைச் சேர்ந்தவன் நான். எழுத்தாளர்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கும். இலட்சியம் இருக்கும். சமுகப் பிரச்சனைகளின் மீது அவர்களுக்கு கோபம் இருக்கும். அதைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் என்பவர்கள் சமுதாய சேவகர்கள்! பேரறிஞர் அண்ணா எனும் மாபெரும் எழுத்தாளர் “ஒரு சமூக குறிக்கோளுள்ள எழுத்தாளன் நான். அந்தக் குறிக்கோள்தான் என்னை எழுத வைக்கின்றது’ எனச் சொன்னார்.

அரசியல் பொது வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருந்தாலும் கடைசிவரை இலக்கியத்தையும் தனது ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டார். 1934’ஆம் ஆண்டு முதன்முதலில் சிறுகதையை எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் அவருடைய வளர்ச்சியும், அரசியல் பணியும் நீங்கள் அறிந்தது தான். ஆனாலும் 1966 வரையிலும் சிறுகதை எழுதினார் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞரின் வழிவந்த எழுத்தாளர்களையும், இலக்கியத்தையும் கொண்டாடினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *