Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பெரம்பலூரில் முந்துவது வேந்தரா, அருணா, சந்திரமோகனா

தமிழ்நாட்டின் அதிக வளர்ச்சியைக் காணாத தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பெரம்பலூர் தொகுதி, தற்போது ஸ்டார் அந்தஸ்தைப் பெற்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதற்குக் காரணம், அங்கு போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள். ஒருவர், தற்போதைய எம்பியும், இந்திய ஜனநாயகக் கட்சின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர். மற்றொருவர், திருச்சி மாவட்ட திமுகவின் முடிசூடா மன்னராகக் கருதப்படும் கே.என்.நேருவின், மகன் அருண் நேரு.

 பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராகக் களத்தில் உள்ள பாரிவேந்தர், தொகுதிக்குத் தான் செய்துள்ள பணிகளைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கட்டணமின்றி இலவசமாக உயர்கல்வி வழங்கப்பட்டு வருவது, கோயில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை அளித்திருப்பது போன்றவை இத்தொகுதியில் பாரிவேந்தருக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் இலவச மருத்துவம் மற்றும் மருந்துகளை வழங்கியதும், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிய பகுதிகளில் சொந்த செலவில் குடிநீர் வழங்கியதையும் குறிப்பிட்டு பாரிவேந்தர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

அமைச்சர் நேருவின் மகன் என்ற அறிமுகத்துடன் களமிறங்கியுள்ள திமுக கூட்டணி வேட்பாளர் அருண் நேருவுக்கு அதுவே பலமாகவும் பலவீனமாகவும் கருதப்படுகிறது. அருண் நேருவின் வளர்ச்சி தங்களது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ஆ.ராசா தரப்பும் மகேஷ் பொய்யாமொழி தரப்பும் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதன் தாக்கம் திமுகவின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சாதி வாக்குகளைப் பொறுத்தவரையில் உடையார் சமூக வாக்குகளைப் பாரிவேந்தரும், ரெட்டியார் சமூக வாக்குகளை அருண் நேருவும், முத்தரையர் சமூக வாக்குகளை அதிமுக கூட்டணி வேட்பாளர் சந்திரமோகனும் பெருமளவில் பெற வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை திமுகவும், அதிமுகவும் பங்குபோடும் என்றும் கருதப்படுகிறது. லால்குடி, முசிறி, தொட்டியம், துறையூர், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் திமுகவினரின் பிரசாரம் தீவிரமாக இருப்பதாகவும் குளித்தலை, பெரம்பலூர் பகுதிகளில் திமுகவினரின் பிரசாரம் சற்று மந்தமாக இருப்பதாகவும் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் அமைச்சர் செல்வராஜின் அண்ணன் மகனாகிய அதிமுக வேட்பாளர் சந்திரமோகனும் திமுகவின் பிரசாரத்துக்கு ஈடுகொடுகும் வகையில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். வேட்பாளரின் குடும்ப பின்னணி, இரட்டை இலைச் சின்னம், இளவரசன், பரஞ்சோதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் அயராத உழைப்பு போன்றவை அவருக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. இருப்பினும் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிவது அவருக்குப் பின்னடைவை ஏறப்டுத்தும் எனக் கருதப்படுகிறது. பரரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டு, ஒருமுறை வெற்றி பெற்றவர். தனது சொந்த நிதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருபவர் என்பது போன்ற விஷயங்கள் அவருக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகின்றன. இருப்பினும் கடந்தமுறை அனைவரும் நன்கறிந்த உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர், இந்தமுறை அதிகம் அறிமுகம் இல்லாத தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவது சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், தொகுதி மக்களுக்குச் செய்த பணிகள், சொந்த செல்வாக்கு மற்றும் பாரதிய ஜனதாவுக்குப் பெருகிவரும் ஆதரவு போன்றவை பாரிவேந்தருக்குச் சாதகமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. 

பெரம்பலூர் தொகுதியில் நிலவும் இந்த மும்முனைப் போட்டியில் எந்த அம்சம் யாருக்கு வெற்றிக்கனியைப் பெற்றுத் தரப்போகிறது என்பதை அறிய ஜூன் மாதம் வரை காத்திருக்கத்தான் வேண்டும். குளித்தலை ரயில்வே பாலம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல மேம்பாலங்களைக் கட்டியது, துறையூர் – நாமக்கல் ரயில் பாதைத் திட்டத்திற்காகக் குரல்கொடுத்து வருவது போன்றவையும் பாரிவேந்தருக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. போட்டி கடுமையாக இருந்தபோதிலும், இந்தத் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றுள்ள பாரிவேந்தர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது அவருக்குக் கூடுதல் பலமாக இருக்கும் என்பது அவரது ஆதரவாளர்களின் கணிப்பாக இருக்கிறது. பிரதமரின் பெரம்பலூர் வருகையும், பிரச்சாரமும் தங்களுக்குப் பெரும் பலமாக அமையும் எனவும் பாரிவேந்தர் தரப்பு கருதுகிறது.

இப்படிப்பட்ட காரணங்கள் அனைத்தையும் முறியடித்து, தேர்தலில் வெற்றி தொல்வியை நிர்ணயிக்கும் ‘வீட்டோ பவர்’ கொண்ட சக்தியாக விளங்குவது விட்டமின் ‘ப’ என்றும், இறுதி வெற்றியை நிர்ணயம் செய்யும் சக்தி இதற்குத்தான் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர்கள் தமிழக அரசியலின் அரிச்சுவடியை நன்கு அறிந்தவர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *