திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்பு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜா (36). இவர் பெல் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார்.
அவரது மனைவி மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு திருவெறும்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்ப வந்து பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவும் உடைக்கப்பட்டு 7 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து உடனடியாக கணவர் மகாராஜாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். மகாராஜா பெல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விரைந்து சென்ற பெல் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெல் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்தபொழுது பெல் நகர் முன்னாள் ராணுவத்தினர் காலனியை சேர்ந்த கிறிஸ்டோபர் நெல்சன் (22), துவாக்குடிமலை அண்ணா வளைவு மகாத்மா காந்தி தெரு பகுதியில் வசிக்கும் சரவணன் (19) மற்றும் சிறுவன் ஒருவன் ஆகியோர் போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக கூறவே போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு மேற்படி காமராஜர் நகர் டவுன்ஷிப் வீட்டில் நகை திருடியது தாங்கள் தான் என்று ஒத்துக் கொண்டனர்.
இதனை அடுத்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சிஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments