சமூக வலைதளங்களுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் மற்றவர்களின் பாராட்டு பெறுவதற்காக பல்வேறு சாகசங்கள், நடனம், நடிப்பு ஆகியவற்றை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக பொது இடங்களில் டப்மாஸ், இருசக்கர வாகனத்தில் சாகசம், பேருந்து மற்றும் ரயில் படிக்கட்டுகளில் தொங்குவது போன்றவற்றை வீடியோக்களாக்க பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆபத்து உணராமல் விளையாட்டாக செய்யக்கூடிய காரியங்கள் சில நேரங்களில் விபரீதமாக முடிகிறது.
இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் மத்தியில் இது போன்ற அநாகரிகமான மற்றும் ஆபத்தான செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கொள்ளிடம் பாலத்தின் மீது இளைஞர் ஒருவர் தண்டால் எடுத்தும் அந்த பாலத்தின் மேலே உள்ள கட்டையின் மீது நடந்து செல்வதும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பாலத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் மீது இருசக்கர வாகனத்தை ஒட்டிய இளைஞரை கொள்ளிடம் போலீசார் பைக்கை பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இளைஞரின் வித்தை காட்டும் செயல் வீடியோ பார்ப்போரை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான விழிப்புணர்வு கொடுத்தாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் மீண்டும் மீண்டும் இது போன்ற ஆபத்தான செயல்களை செய்யும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments