கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பாரதி எழுத காரணமாக இருந்த ஊர்களில் திருச்சி முக்கியமானது. ஓர் ஊரின் வளர்ச்சியில், வாழ்வில் கல்வி வளர்த்த கூடங்களும் வரலாறும் முக்கியம். கல்வி வளர்த்த பல பள்ளிகளும், கல்லூரிகளும் திருச்சியின் அடையாளங்களாய் ஒளிர்கின்றன.திரும்பும் திசையெல்லாம் கல்லூரிகளால் நிறைந்த ஊர். ஆங்கிலேயர்களால் தேசியம் என்ற வார்த்தை எதிர்க்கப்பட்ட காலகட்டத்தில் மூன்று ஆசிரியர்களால் 1919 இல் மலை கோட்டை அருகில் ஆரம்பிக்கப்பட்டது திருச்சி தேசிய கல்லூரி.
சேஷ ஐயங்கார், சுந்தரேச சாஸ்திரிகள், வேங்கடரமண சர்மா ஆகியோர் 1886-ல் ஆரம்பித்த தேசிய உயர்நிலைப் பள்ளியே பின்னாட்களில் தேசியக் கல்லூரி வரவும் காரணமானது. பெத்தாச்சி செட்டியார், நீதிபதி சேஷகிரி ஐயர், தேசிகாச்சாரியார் போன்றோரால் ஜூன் 1919-ல் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1924-ல் முதல்நிலைக் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது. 1921 முதல் 1947 வரையான 26 ஆண்டுகள் கல்லூரியின் முதல்வராக பேரா.சாரநாதனின் பணி முக்கியமானது. திண்டுக்கல் சாலையிலுள்ள கருமண்டபம் பகுதியில் 1959, ஜூலை 8 முதல் தேசியக் கல்லூரி இயங்கத் தொடங்கியது.
2016 ல் A+ தகுதியை பெற்ற இக்கல்லூரி 2011-ல் Excellence தகுதியையும் அடைந்தது. கிட்டத்தட்ட 2 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட 105 ஆண்டுகள் பழமையான நிறுவனம். கூடைப்பந்து மற்றும் பூப்பந்து மைதானங்களுடன் உள்ளரங்கம். 400மீ தடகளப் பாதை, கிரிக்கெட் மற்றும் கால்பந்து மைதானம் மற்றும் புகைப்பட நகல் மையம் 1 லட்சத்திற்கும் அதிகமான நூல்களுடன் நவீனமயமாக்கப்பட்ட நூலகம் மற்றும் ஆம்பிதியேட்டர் வசதிகளுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 4000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
குடியரசுத் தலைவராகவிருந்த ஆர்.வெங்கட்ராமன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுதர் சி.ரெங்கராஜன், சென்னைத் தொலைக்காட்சியின் இயக்குநராக இருந்த ஏ.நடராஜன் போன்ற பலர் இக்கல்லூரியில் உருவானவர்களே.
இக்கல்லூரியின் மண்ணியல் துறை தனித்துவமானது. அதுபோலவே இங்குள்ள வேதியியல் துறை குறிப்பிடத்தக்கது. தமிழ் அறிஞர்களான ராதாகிருஷ்ணன் கு.திருமேனி, ஆ.ஜெகந்நாதன் ஆகியோர் பணி செய்தது இங்குதான். உலக அரங்கில் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் திருச்சி தேசிய கல்லூரி பல சாதனைகளை செய்து சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது..
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments