திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூர் அருகே உள்ள காச்சக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாசாமி – ராஜாமணி தம்பதியினர். இந்த தம்பதிக்கு முரளி, பாண்டியன் (28) என்ற இரண்டு மகன்கள். மூத்த மகன் முரளி ஏற்கனவே பாம்பு கடித்து இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த பாண்யனும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமாகி விட்டார்.
தந்தை அண்ணாசாமி இறந்து விட்ட நிலையில் தாய் ராஜாமணி மற்றும் அவரது உறவினர்கள் பாண்டியனை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணப்பாறை காவல் நிலையத்திற்கு ராஜஸ்தான் மாநிலம், ஜின்ஜினா மாவட்டத்தில் உள்ள பட்பர் என்ற கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் இருப்பதாகவும், அவர் மணப்பாறை பகுதி என்று கூறுவதாகவும் தெரிவித்து உள்ளார்.
உடனே இதுபற்றிய தகவலை மணப்பாறையை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜி.என்.ஆர்.ஸ்ரீதரிடம் கூறிய பின்பு அவர் வாலிபரை மீட்டு குடும்பத்தில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டார். முதலில் அந்த வாலிபரின் படத்தை வாட்ஸ் அப் மூலம் அங்கிருப்பவர்களிடம் இருந்து பெற்று அது காச்சக்காரன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பதை உறுதி செய்ததோடு அவர் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு மாயமாகி இருப்பதையும் குடும்பத்தினரிடம் உறுதி செய்து பின்னர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை உறவினர்கள் உதவியுடன் மீட்கும் பணியை கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்டார்.
பட்பர் கிராமத்தில் உள்ள தன்னார்வலர்களின் உதவியோடு பாண்டியன் ஜெய்ப்பூர் அழைத்து வரப்பட்டார். பின்னர் விமானம் மூலம் ஜெயப்பூர் சென்ற பாண்டியனின் சித்தப்பா ராமலிங்கம் என்பவர் சென்று அங்கிருந்து பாண்டியனை விமானம் மூலம் அழைத்து வர முயன்ற போது பாண்டியனுக்கு எந்தவித அடையாள அட்டையும் இல்லை. இதனால் அவரை அழைத்துச் செல்வதில் தொய்வு ஏற்படவே மீண்டும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஜி.என்.ஆர்.ஸ்ரீதரன் மூலம் அங்கிருந்து ஓய்வு பெற்ற ராணுவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பாண்டியன் மற்றும் அவரது சித்தப்பா திருச்சிக்கு விமானம் மூலம் வந்தனர்.
பின்னர் இதற்கு முதற் காரணமாக செயல்பட்ட ஸ்ரீதரனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காச்சக்காரன்பட்டிக்கு சென்று பாண்டியனை தனது தாயிடம் ஒப்படைத்தனர். 2 ஆண்டுகள் 2481 கிலோ மீட்டர் தொலைவு என நீண்ட வரலாறில் மாயமான வாலிபர் மீண்டும் குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments