Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

“போதைப்பொருட்கள் இல்லாத திருச்சிராப்பள்ளி” – மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்காக பயிற்சி கருத்தரங்கு

திருச்சிராப்பள்ளி கலையரங்கில் இன்று (09.11.2024) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத திருச்சிராப்பள்ளி” மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,(ஓய்வு) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டத்தினை இரும்பு கரம் கொண்டு அடக்கிட தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராம வாரியாக தொடர்புடைய துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற நிலையை உருவாக்கிட போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்காக பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.(ஓய்வு) தனது உரையில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்படவும், அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது.

மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் தனது பொன்னான காலத்தை இழக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் தனது உடல் நலம் மற்றும் செல்வம் ஆகியவற்றோடு வாழ்நாளையும் இழந்து விடுகிறார். நேரம் மிகவும் முக்கியமானது. அதனை நாம் அனைவரும் மிகச்சரியாகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும். விரையமான நேரத்தை திரும்பபெற இயலாது. எனவே நீங்கள் நல்லொழுக்கத்தை பேணுபவர்களாக திகழ்வதோடு, போதை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுக்க உதவிட வேண்டும்.

முக்கியமாக அவ்வாறான தீய பழக்கம் உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். உங்கள் பகுதிகளில் போதை பொருள் விற்பது தொடர்பாக தெரியவந்தால் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்திட வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல் ரகசியமாக வைக்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் 20 நபர்களுக்காவது போதை பழக்கத்தின் தீமையை தெரிவிப்பதன் மூலம் அரசின் நோக்கமான நூறு சதவீத போதை பொருளில்லா தமிழ்நாட்டினை உருவாக்க முடியும். அந்த வகையில் நீங்கள் செயல்பட ஆரம்பித்தால் போதை பொருளில்லா திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை உருவாக்கிட முடியும் என மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ தூதுவர்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு (ANTI DRUG CHAMPION) வில்லைகளை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப.(ஓய்வு) அணிவித்தார்.

தொடர்ந்து, போதை பழக்கத்தினால் ஏற்படும் வியாதிகள் குறித்து மருத்துவர் ஜி.கோவிந்தராஜ் அவர்களும், போதை பொருள் பயன்பாடு ஒரு அறிமுகம் என்னும் தலைப்பில் உதவி பேராசிரியர் மரு.பாரதி அவர்களும் வளர் இளம் பருவத்தினரின் போதை பொருட்கள் பயன்பாடு சமூக உளவியல் சார்ந்த சிகிச்சை முறைகள் குறித்து உதவி பேராசிரியர் மரு.கார்த்திக்கேயன் அவர்களும், போதை பொருள் தடுப்பு மற்றும் குற்றவியல் நடவடிக்கை என்னும் தலைப்பில் ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.ராஜா அவர்களும், பள்ளி. கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களிடம் உரையாற்றி கலந்துரையாடினார்கள்.

இக்கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீரவைத் துறை உதவி ஆணையர் திரு.உதயகுமார், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவ தூதுவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *