Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு முறைகளுக்கு ஒத்துழைப்பு தர மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. பருவமழை காரணமாக கொசுக்கள் மற்றும் நீரின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகிறது. காய்ச்சலானது பலதரப்பட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பல்வேறு நுண்ணுயிரிகளின் தாக்கத்தினால் ஏற்படுகிறது.

இதனால் மக்கள் டெங்கு, சிக்குன்குன்யா, லெப்டோஸ்பைரோசிஸ், ஸ்கரப்டைபஸ், ஹெபடைடிஸ்A, இன்புளுயன்ஸா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் தங்கள் உடல்நலனை பேணிகாக்கவும். காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்ளவும் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் வீடுகளில் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், கொட்டாங்குச்சி, ஆட்டுக்கல், டயர்கள் மற்றும் இதர தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். தினமும் கொதிக்க வைத்து ஆறவைத்த குடிநீரை பருக வேண்டும். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் காணப்படும். அடுத்த மூன்று நாட்களில் இரத்தத்தில் அணுக்கள் குறைதல் மற்றும் மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் காய்ச்சல் ஏற்பட்ட மூன்று தினங்கள் கழித்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மற்றும் ஆறு நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய மருத்துவம் பெற வேண்டும். காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். (தினசரி 4 முதல் 6 லிட்டர்) ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜீஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அவ்வப்போது குடிக்கவும். காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நபர் ஓய்வில் இருக்க வேண்டும் மற்றும் அதிகப்படியான உடல் உழைப்பை தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நிலவேம்பு குடிநீர் / கபசுர குடிநீர் அருந்த வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

இருமும்போதும் தும்மும் போதும் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மஞ்சள்காமாலையினால் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சையை பெற வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காய்ச்சலினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் (அ) அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

 பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி தங்களை பருவ மழையினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *