திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது இடத்தில் புதிதாக தண்ணீரில் தொட்டி கட்டுவதற்காக பணியாட்களை வைத்து குழித் தோண்டியுள்ளார்.
அப்போது 8 அடி ஆழ பள்ளத்தில் 3 சாமி சிலைகள் அதனுடன் சில பொருட்களும் தென்பட்டுள்ளது. இது அனைத்தையும் மீட்ட அவர் இதுகுறித்து திருச்சி சரக ஐ.ஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் பூமிக்கு அடியில் இருந்த மீட்கப்பட்ட சிலைகள் ஐம்பொன்னினால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தெய்வங்களின் சிலைகள் என்பதும் அதனுடன் மீட்கப்பட்ட பொருட்கள் சாமிக்கு பூஜைகள் செய்ய பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழையான இந்த 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்பது வட்டாட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சிலைகளை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
இதற்கிடையில் பூமிக்கடியில் பழமையான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து சிலையை தரிசனம் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments