Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

ஓட்டி ஓட்டி உழைக்கணும்!! சைக்கிள் பயணத்தில் திருச்சி மக்கள்!! என்ன சொல்கிறார்கள்?

பிரதான சாலைகள் இன்று நிதானம் கொண்டுள்ளது…வாகன சத்தங்கள் மறைந்து இன்று வானக ஓசை ஒலிக்கிறது!வண்டிகளின் பயணம் குறைந்து வன விலங்குகளும் சாலையில் வலம் வருகிறது! தொழிற்சாலை கழிவுகளை சுமந்த நீர்நிலைகள் எல்லாம் இன்று தொல்லையின்றி தூய்மையடைந்து வருகிறது… ஒரு பக்கம் நோயை அழிக்க ஊரடங்கு என்றால்  மறுபக்கம் மனித வாழ்வியலில் இப்படி பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அதில் ஒன்றுதான் அதிகரித்து வரும் சைக்கிள் பயன்பாடு..கொரோனா பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியில் வருபவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய தொடர் நடவடிக்கையால் தற்போது சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இது குறித்து ஒரு சிறப்பு செய்தி தொகுப்பினை பார்க்கலாம்…

திருச்சி நெடுஞ்சாலைகளில் சைக்கிளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில், வாரத்தில் ஒருநாள் மட்டுமே மக்கள் வீடுகளில் இருந்து வெளிவந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில், திருச்சி மாநகராட்சி சார்பில் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கவும் திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் சைக்கிளில் அதிக அளவு பயணித்து வருகின்றனர்.144 தடை உத்தரவால் பலரும் வேலை இழந்துள்ளதால், தங்களுடைய இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது என்பது செலவீனத்தை அதிகரிக்கும் என்பதால், தங்கள் இல்லங்களில் உள்ள சைக்கிளை தூசி தட்டி எடுத்து மீண்டும் சாலைகளில் பயணித்து வருகின்றனர்.

கருமேகங்கள் சூழ்ந்த காலைப்பொழுதில் திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் மேலிருந்து கீழே ரயில்வே பாதையை பார்த்தவாறு சைக்கிளில் ஹாயாக வந்துகொண்டிருந்தார் வெங்கடேஷ். அவரிடம் போய் பேசினோம் “நான் இங்கதான் ஒரு தனியார் கம்பெனில வேலை பார்த்துட்டு வரேன்.எங்க வீடு திருச்சியிலிருந்து 21 கிலோமீட்டர் இருக்கும்.அங்க இருந்து சைக்கிளே வந்துட்டு சைக்கிலேயே போறேன். தினமும் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு போறத விட அந்த காசை பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கலாம். இந்த மாதிரி நேரத்துல சைக்கிள்ல போனதுதான் நல்லது” என்கிறார் வெங்கடேஷ்.

அருகிலுள்ள கடைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், நாம் ஏதோ அதிக தூரம் பயணித்து வருகிறோம் என்றும், தேவையின்றி வெளியில் வருகிறோம் என்றும் எண்ணி காவல்துறையினர் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்வதால் இவற்றை தவிர்க்கும் வகையில் சைக்கிளில் வருகிறேன் என்கிறார் இளைஞர் வினோத்.

நான் இங்க உள்ள பேக்கரியில் வேலை பார்க்கிறேன்.முன்னாடியெல்லாம் பஸ் வசதி இருக்கும் அதனால தினமும் பஸ்ல வந்து விடுவேன். ஆனால் இப்போது எதுவுமே ஓடல. அதுனால இந்த சைக்கிள்ல தினமும் காலையில 6 மணிக்கு வருவேன். இதுவும் ஒரு உடற்பயிற்சி மாதிரி தான் இருக்கு என்கிறார் பிரசாத்.

இப்படி தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காகவும், போக்குவரத்திற்காகவும் சைக்கிளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.144 தடை உத்தரவு என்பது எல்லா தரப்பினரிடமும் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், மனிதர்கள் இயற்கையின் சார்பு தன்மையை பின்பற்ற ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த 144 தடை உத்தரவு என்பது சமூகத்தில் நாம் எதிர்பாராத பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.
இயந்திரமாய் சுழன்று கொண்டிருந்த மனிதர்களை, இயற்கை வாழ்வியலுக்கு தள்ளியிருக்கிறது 144 தடை உத்தரவு… என்பதற்கு அதிகரித்துள்ள சைக்கிள் பயன்பாடும் ஒரு உதாரணம்!

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *