திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிதான் ராம்ஜிநகர். இந்தப் பெயர் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பிற மாநிலங்களில் பிரபலமடைந்து உள்ளது. இதற்கு காரணம் பொருட்கள், நகை, பணம் ஆகியவை லாவகமாக எடுப்பது தான். களவாடுவதில் சிறப்பு பெற்ற ராம்ஜிநகர் பகுதி தற்போது சட்டவிரோத மது விற்பதில் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அரசு விடுமுறை மற்றும் இரவு டாஸ்மாக் கடை மூடிய பிறகு மது விற்பனை நடைபெறும் இடம் தான் ராம்ஜிநகர்.
பாட்டில் ஒன்றிற்கு 50 அல்லது 70 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி அதிக வாடிக்கையாளர்களையும் தன் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது தங்கு தடையின்றி 24 மணி நேரமும் இப்பகுதியில் மது விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் 2வது முறையாக இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் டாஸ்மாக் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ராம்ஜிநகரில் தொடர்ந்து மது விற்பனையை அதிகரிக்க வித்தியாசமான முறையை அப்பகுதி மக்கள் கையாண்டுள்ளனர். ரெகுலர் வாடிக்கையாளர்கள் போன் செய்தால் வாங்கும் மதுவிற்கு வாட்டர் மற்றும் சைடிஸ் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதன் விலையே 200 ரூபாய் தான். இதுமட்டுமில்லாமல் தினசரி வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி,சட்டை, குவாட்டர் கொடுத்து குஷிப்படுத்தியுள்ளனர் கள்ள சந்தை மது விற்பனையாளர்கள்.
இது போன்ற சலுகைகள் குடிமகன்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அறிவித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், எந்த நேரத்திலும் தங்குதடையின்றி ராம்ஜிநகர் பகுதியில் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. சட்டவிரோத மதுவிற்பனையில் கொடி கட்டி பறக்கும் மதுவிற்பனையாளர்களை பிடித்து அதிகாரிகள் சிறப்பாக கவனிப்பார்களா ?
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments