திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்- திருப்பைஞ்சீலி சாலையில் உள்ளது திருவரங்கப் பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும், திருச்சி மாவட்டம் துறையூர் கருப்பம்பட்டியை சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது.
திருவரங்கப்பட்டி மாரியம்மன் கோவிலில் நடைபெறும் இந்த திருமணத்திற்காக பெண்ணை அழைத்து வருவதற்காக மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினர் லோடு வேன் மற்றும் காரில் கருப்பம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
துறையூர் அருகே கொட்டையூர் என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக வேன் ஓட்டுனர் இடதுபுறம் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த மாப்பிள்ளையின் உறவினர் பெரியண்ணன் (55) இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் வேனில் பயணம் செய்த மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
Comments