Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 200 பேர் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது – திருச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 353 இடங்கள், நகர்புற பகுதிகளில் 162 இடங்கள் ஆக மொத்தம் 515 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்று வரும் முகாமினை மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய 10 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர்கள் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன்… தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இன்று 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவது என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் சதவீதம் இதுவரை 56 சதவீதமாக உள்ளது.அது இன்று 60 சதவீதத்தை கடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை வழங்குவதற்கான தனி துறை ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதற்காக 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துறைக்கு தேவையான கருவிகள் 25 நாட்களுக்குள் வாங்கி நிறுவப்படும். நகராட்சி நிர்வாக துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக முதலமைச்சர் ஆணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில்  நீட் தேர்வு எழுதிய 1,10,971 மாணவர்கள் அனைவருக்கும் மன நல ஆலோசனை வழங்கும் பணியில் 333 மன நல மருத்துவர்களும்,மன நல ஆலோசகர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 80 விழுக்காடு மாணவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் சுமார் 200 மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களை மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறோம். 20 சதவீத மாணவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. அவர்களையும் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இந்தியாவில்  இத்தகைய நல்ல நடைமுறை தமிழ்நாட்டில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். தமிழ்நாட்டிற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை என முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் ஒன்றிய சுகாதார துறை அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளார். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளி கல்வி துறை சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தொடர்பான கூட்டத்தில் முதலமைச்சர் அது குறித்து முடிவெடுப்பார். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரிடமிருந்து குடியரசு தலைவருக்கு சென்ற பின்பு குடியரசு தலைவரை நேரில் சந்திப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என கூறினார்.

இந்த நிகழ்வில் திருச்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, செளந்தரராஜன், ஸ்டாலின் குமார், கதிரவன், தியாகராஜன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *