Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

மாநகரம் வியந்த சாதனை பெண்மணி அமுதவல்லி!

கல்வி தான் ஒருவரின் வாழ்வை மாற்றும் அதிலும் குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு மிகச் சிறந்த ஆயுதமாக விளங்குவது கல்வியே! தன் குடும்பத்தையும் தன் அரசு பணியையும் அறம் சார்ந்த சிந்தனையோடு உழைப்பையும் மூலதனமாகக் கொண்டு தன் வாழ்வில் சாதனைபடைத்து சமூகத்திற்கான தன் பணியை தொடர்பவர்தான் திருச்சி மாநகராட்சியின் முதல் பெண் நகர் பொறியாளர் அமுதவல்லி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1962இல் கோ.சபாபதி அசனாப்பாள் ஆசிரியர்கள் தம்பதியருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை திட்டக்குடியில் முடித்துவிட்டு சென்னை அடையாறு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பணியில் சேர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளில் செங்கல்பட்டு,விருதாச்சலம் ஆகிய இடங்களில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்திருக்கிறார்.

1984ஆம் ஆண்டு பணியில் பதவி உயர்வு அதேஆண்டு  தன் வாழ்க்கை துணையான மா.பாண்டியனை கரம்பிடித்தார். பொன்மலை நகராட்சியில் இளநிலை பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டவுடன் 1985-ஆம் ஆண்டு காவிரி தாயின் செல்ல மகளாக திருச்சியிலே இனி வாழ்வை தொடர முடிவு செய்தார். கணவரின் சகோதரர்களின் கல்விப் பயணத்திற்கு திருச்சி சிறந்த இடம் என்று அவர் அப்போதே முடிவு செய்திருந்தார். தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிறப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அதற்காக பாடுபட்டவர் இன்றைக்கு ஒரு மிகப் பெரிய குடும்பமாக இருப்பதைநினைத்து பெருமை கொள்பவர்.

கல்விதான் பெண்களை உயர்த்தும் என்பதை உணர்ந்து குடும்பப்பொறுப்பு பணிச்சுமை ஆகியவை இருந்தப்போதும் 1994ஆம் ஆண்டு திருச்சி NIT யில் சிவில் இன்ஜினியரிங் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1994-ஆம் ஆண்டு திருச்சி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. அப்போது ஜூனியர் இன்ஜினியராக பணிபுரிந்தவர், உதவி இன்ஜினியராக பதவி உயர்வு பெற்று 11 ஆண்டு காலம்சிறப்பாக பணிபுரிந்தார். சிறந்த பணியால் தன்னுடைய தொடர்உழைப்பால் 2005 ஆம் ஆண்டு அசிஸ்டன்ட் எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியராக உயர்வு பெற்று பல சவால்களையும் தன்னுடைய பணியில் சந்தித்தார்.

2005ஆம் ஆண்டு காவிரியில் வெள்ளம் ஏற்பட்டபோது ஸ்ரீரங்கம் வேலூர் காவிரி கரை உடையும் தருவாயில் இருந்ததை கண்டறிந்து உடனடியாக மாநகராட்சியின் உதவியை கோரினார். அப்போது சூழல் மிகவும் மோசமான நிலையில் இருந்த போது அங்குள்ள 200 இளைஞர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் காவிரி கடையை உடையாமல் தடுத்துள்ளார்கள் இதன் மூலம் பெரிய உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடிந்தது. ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் அறிவியல் பூங்காவில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்பு செய்தவர்களை தன்னுடைய துறை அதிகாரிகள் உதவியோடு மீட்டெடுத்தார்.

இதுபோன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். 2015ஆம் ஆண்டு எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் ஆக பதவி உயர்வு பெற்றார். 2017 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் நகர் பொறியாளர் என்ற சிம்மாசனத்தை அடைந்தார். திருச்சி மாநகராட்சிக்கு பத்திற்கும் மேற்பட்ட ஸ்வட்ச் விருது தொடர்ந்து3 ஆண்டுகள் கிடைப்பதற்கு இவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

இன்னும் இவர் செய்த சாதனைகளும் பெற்ற விருதுகளும் பன்மடங்கு. இது ஒரு பெரும் சாதனையை ஓட்டம் வெயில், மழை, காற்று, பனி என எல்லா கால சூழலிலும் சமூகத்திற்காக பணி செய்து தன்னுடைய 40 ஆண்டு கால அரசு பணி வாழ்வில் வெற்றி இலக்கை தொட்டுள்ளார். முதல் என்ற இடம் என்பது எப்போதும் பல சவால்கள் நிறைந்தது அப்படி தமிழகத்தின் முதல் நகர பொறியாளர் திருச்சி மாநகரத்தின் முதல் நகர் பொறியாளர் என்ற பெருமையோடு சேர்ந்த பணி சுமையையும் சுமந்து தன்னுடைய 40 ஆண்டுகால பயணத்தின் இறுதி நாளை நேற்று நிறைவு செய்துள்ளார். இந்த பணி நிறைவு விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் துணைமேயர், மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் அவருடன் பணியாற்றிய அலுவலர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு பணியாளராக இவர் பணி ஓய்வு பெற்றாலும் ஒரு சமூக அக்கறை கொண்ட மாதராக  இவரது பயணங்கள் தொடரட்டும்!!

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLano

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *