திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனி பகுதியில்கடந்த ஓராண்டுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். மேலும் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளதை மீண்டும் அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று பூலாங்குடி காலனி பகுதியில் ஜே சி பி உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தடுத்தனர். எவ்வித முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டதாக அப்பகுதி வியாபாரிகள்,பொதுமக்கள் தடுத்தனர்.
இதனால் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டு இரண்டு முறை நோட்டீஸ் விநியோகிக்கப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வியாபாரிகளும் தங்களது பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் நெடுஞ்சாலை துறையினர் வலியுறுத்தினர்.
தவறும் பட்சத்தில் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என நெடுஞ்சாலை துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நவல்பட்டு சூரியூர் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments