Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கொரானா நோயாளிகளுக்கு உதவிடும் ஆட்டோ ஓட்டுனர்கள்

கொரானா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் நோயுடன் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க நடுத்தர மக்கள் வறுமையோடும் இணைந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். நண்பர்களாக பார்த்தவர்கள் கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்நியர்களாக மாறும் மனிதர்களுக்கு  மத்தியில் கொரானா தொற்று நோயாளிகளுக்கு   உதவ முன்வந்துள்ளனர் திருச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களான கார்த்திக் மற்றும் மணிகண்டன்.

இருவரின் ஆட்டோக்களிலும் மட்டுமின்றி மனதிலும் கொரானா  நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று எழுதியுள்ளோம் என்கிறார் கார்த்திக். மேலும் அவர் கூறுகையில்…. திருச்சி முதலியார் சத்திரத்தில் வாடகை வீட்டில் தான் வசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பிள்ளைகள் ஒரு மகளும், மகனும் கல்லூரி படிப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கல்விக்கு உதவ வேண்டும் என்பது மனதில் முதலில் தோன்றினாலும், மக்களுக்கு நம்மால் எதையாவது செய்திட இயலாதா என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.

இரண்டு வாரத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனை முன்பு ஒருவர் ஆம்புலன்ஸ் இல்லாமல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல தவித்துக் கொண்டிருந்த போது ஏன் இதுபோன்று நிற்பவர்களுக்கு உதவிட கூடாது என்று நினைத்து தான் இதனை தொடங்கினேன். இன்றைக்கு எத்தனையோ நோயாளிகளை என் ஆட்டோவில் ஏற்றி அவர்கள் அழைத்துச் செல்கின்றேன். அவர்கள் மிகவும் வயதானவர்களாக இருந்தால் அவர்கள் வண்டியில் ஏறிட உதவுவேன் . அவர்களோடு  பயணிப்பதால் எனக்கு தொற்று ஏற்பட்டு விடவில்லை.
குழந்தைகளும், மனைவியும் முதலில் சிறிது பயந்தனர். ஆனால் மக்களுக்காக செய்வதை முழுமனதோடு தற்போது ஏற்றுக்கொண்டு என் வண்டியை சுத்தம் செய்வது எனக்கு கபசுரக் குடிநீர் போன்றவற்றைக் கொடுப்பது எண்ணை தற்காத்து  கொள்வதற்கு அவர்கள் உதவி வருகின்றனர்.

சென்ற ஆண்டுமே இதுபோன்ற உதவியினை  செய்துள்ளேன். இறைவனை வணங்கிக் கொண்டு மக்களுக்காக செய்யும் பொழுது நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற ஒற்றை நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டிருக்கிறேன் மக்களுக்காக உழைத்தாலும் அரசு கூறும் சில கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க தான் வேண்டி இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளில் எங்களுக்கு மக்களை அழைத்து செல்லும் போது இடையூறு இல்லாமல் இருப்பதற்கு பாஸ் வசதி செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார் கார்த்தி .   

நண்பர்களாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் கூறுகையில்… என் வீட்டில் நானும் என் மகள் மட்டும் தான் இந்த நாட்டிற்காக பெரிதாக ஒன்றும் செய்திட இயலாது என்னால் முடிந்த வகையில் மற்றவர்களுக்காக சிறு உதவியாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அப்படி என்னால் முடிந்த உதவியாக  இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன். இதன் மூலம் எனக்கும் வருமானம் கிடைக்கின்றது  சராசரியாக ஒரு நாளைக்கு 300 லிருந்து 600 ரூபாய் சம்பாதிக்கிறேன்.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு முழுமையாக உதவிட எங்கள் குடும்ப சூழலும் ஒத்துழைக்காத நிலையில் அவர்கள் கொடுப்பதை  மனதார  ஏற்றுக் கொள்கிறோம். யாரோ ஒருவருக்கு உதவியாக இருந்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது மனநிறைவு ஏற்படுகிறது என்கிறார் மணிகண்டன். தேவைக்கு ஏற்றவாறு செய்யும் உதவிகளிலும் மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *