நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றிடும் வகையில் அவர்களது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் மே 23 ஆம் தேதி கொண்டாடப்படடுவது வழக்கம்.
1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திருச்சி மாநகரில் உள்ள பாரதிதாசன் சாலையில் முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவி திறந்து வைத்தார். பிறகு 2002 ஆம் ஆண்டிலிருந்து இவரது பிறந்தநாள் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. முத்தரையர் சங்கத்தினர், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், பல்வேறு சங்கங்கள், திருச்சி மாவட்ட பிரமுகர்கள் பலரும் ஊர்வலமாக வந்து திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.
கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு விழாவுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிதாசன் சாலையில் முழுஉருவ வெண்கலச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், பழனியாண்டி உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments