Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் சூறாவளி பரப்புரை!

திருச்சி என்பது அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் மாநகரம். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தங்களுடைய முதற்கட்ட நடவடிக்கையினை திருச்சியில் இருந்து தான் தொடங்குவர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திருச்சியின் பல கட்சியினர் மையம் கொண்டு தீவிர பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். 

Advertisement

இந்நிலையில் எடப்பாடி முதல் பரப்புரையை துவங்கி இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நாமக்கல்லில் இருந்து திருச்சி மாவட்டம் தொட்டியம் வானப்பட்டரை மைதானத்தில் பொது மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தமிழக முதல்வருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த பிரச்சார கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் , வளர்மதி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு, தொட்டியம் பண்ணை வீடு பகுதியில், வாழை விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதோடு விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். தொட்டியம், வெற்றிலை பால விநாயாகர் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தினார். பெண்கள் மஞ்சள் கொத்து அளித்து ஆரத்தி எடுத்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் , வளர்மதி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்…”ஒப்பற்ற தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அதிமுக அவர்கள் வழியில் இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு கொடுத்து உள்ள ஒவ்வொரு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எந்த காலத்திலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் எந்த திட்டமும் நடக்க வில்லை என்று பொய் கூறி வருகிறார். ஸ்டாலின் ஒன்றும் உழைத்து பழக்கப்பட்டவர் அல்ல.எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக வில் குழப்பம் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார் அது ஒருபோதும் நடக்காது..அதிமுகவை பொறுத்தவரையில் மடியில் கனமில்லை, மனதில் பயமில்லை ஆனால் திமுகவை பொறுத்தவரையில் அப்படி இல்லை” என்றார்

தொடர்ந்து, திருச்சி மாவட்டம் கண்ணனூர் அடுத்த கொத்தம்பட்டியில், பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலனி குடியிருப்பில் வீடு வீடாக சென்று, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு செய்த நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார்.

பின்பு, திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி ஆலைத் தொழிலாளர்களுடன் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் முதல்வரிடம் 3 கோரிக்கை மனுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் கொடுத்தனர். அதில் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஏற்படும் மின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் விரும்பி உண்ணக்கூடிய நெல் பயிர்களை தமிழகத்திலேயே பயிரிடச் செய்ய வேண்டும். அதற்காக வேளாண்மை துறை செயலர் தலைமையில் விவசாயிகள், விதை ஆராய்ச்சி ஆய்வாளர்கள், அரிசி ஆலை சங்க பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். அரிசி விற்பனைக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என 3 கோரிக்கை மனுவை தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம் . சிவானந்தன் உள்ளிட்டோர் முதல்வரிடம் கொடுத்தனர்.

அரிசி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை கேட்ட முதல்வர் …. “மண்ணச்சநல்லூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்தார். பிரசித்திப் பெற்ற திருச்சி மண்ணச்சநல்லூர் அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்- திருச்சி மண்ணச்சநல்லூர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதியளித்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டம் சமயபுரம், நம்பர் 1 டோல்கேட்டில் பொதுமக்களிடையே பரப்புரை நடத்தினார்

“சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய பொன்னான வாக்குகளை இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். மண்ணச்சநல்லூர் தொகுதி வேளாண் பெருமக்கள் நிறைந்த தொகுதி, வேளாண் தொழிலாளர்களுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்து வருகிறோம். நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். குடிமராமத்து திட்டத்தின் மூலமாக பல ஆண்டுகளாக ஏரிகள் தூர் வாரப்படாமல் இருக்கிறது.

அதை எல்லாம் தூர்வாரிய காரணத்தினாலே பருவமழை முழுவதும் சேமித்து வைக்கப்படுகிறது. நீர் மேலாண்மைக்கு விருதுபெற்ற ஒரே அரசு அம்மாவின் அரசு.கொரோனா வைரஸ் தொற்றை நமது அரசு கட்டுப்படுத்துகிறது.சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த உடனே அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். இந்தியாவில் முதன்முதலாக நாம்தான் அறிவித்தோம். எல்லா நியாய விலை கடை களிலும் கொரோனா காலத்தில் அனைத்து பொருட்களும் கொடுத்துள்ளோம். வருகின்ற 4ஆம் தேதியில் இருந்து 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்கப்படும். புதிய கல்லூரிகள், பள்ளிகள் திறப்பு கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கல்வி கற்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் உயர்ந்திருக்கிறது. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஏழு இடத்தில் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் 2 லட்சத்தை 5 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம். அம்மா மறைந்தாலும் அம்மாவும் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம்.

நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் RTPCR சோதனை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு 443 பேர் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும்.‌அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” எனக் கூறி முடித்தார்.

Advertisement

நாளை தமிழக முதல்வர் திருச்சி மாநகர் முழுவதும் மற்றும் மணப்பாறை திருவரம்பூரிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *