Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அமைச்சர் நேரு எம்பி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் பின்னணி விவரம்

 திருச்சி காவல்நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திமுக வட்டச்செயலாளர் மூவேந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில் எம்.பி.ஆதரவாளர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிவா ஆதரவாளர் சூரியகுமார் கொடுத்த புகாரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமைச்சர் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின் முழுவிவரம்:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிராட்டியூர், கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ. காலனி சண்முகா நகர், ஆழ்வார் தோப்பு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அரசு திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி. வீடு அமைந்துள்ள எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கார்களில் அணிவகுத்து சென்றனர்.அப்போது திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டின் அருகாமையில் சிலர் நின்று கொண்டு அமைச்சர் கே.என்.நேருவின் காரை திடீரென்று வழிமறித்து அவருக்கு கருப்பு கொடி காட்டினர். இதனை சற்றும் எதிர்பாராத தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் போலீசாரும் அங்கு ஓடி வந்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது, எஸ்.பி.ஐ. காலனி நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டியது தெரியவந்தது. இது நேரு ஆதரவாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சிலர் சிவா எம்.பி. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கற்கள் மற்றும் சவுக்கு கட்டைகளை கொண்டு வீட்டு காம்பவுண்ட் சுவர் முகப்பு விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவா எம்.பி. வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய 10 பேரை திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

இதற்கிடையே சிலர் திடீரென போலீஸ் நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் அங்கு இருந்த நாற்காலிகளை எடுத்து, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்த சிவா எம்.பி.யின் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த களேபரத்தை தொடர்ந்து காவல் நிலையத்தை சுற்றியும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் இன்று திருச்சியில் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஆனது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நவீன இறகு பந்து உள்விளையாட்ட ஆரம்பத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியாகும் இது பொதுமக்களால்  நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அமைச்சர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர் எம் பி யின் பெயர் குறிப்பிடாதற்கு  என்று தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisio

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *