Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் -ஐ.ஜே.கே மாநாட்டில் தீர்மானம்

இந்திய ஜனநாயக கட்சி சார்பில், திருச்சியில், ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற மாநில மாநாடு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். மாநாட்டில், துணை பொதுச் செயலாளர் விஸ்வநாதன், மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேஷ்வரன், துணை தலைவர் ஜீவா, தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், முதன்மை செயலாளர் சத்யநாதன், முதன்மை அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ராஜன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனர் தேவநாதன், , புதிய நீதி கட்சி சண்முகம், காமராஜர் மக்கள் கட்சி தமிழருவி மணியன், பா.ஜ., கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் எம்.பி., பாரிவேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 இந்திய ஜனநாயக கட்சி சார்பில், திருச்சியில், ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற மாநில மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்…. எம்.பி., பாரிவேந்தரின் தொடர் முயற்சியால், அரியலுார், பெரம்பலுார், துறையூர் மற்றும்- நாமக்கல் புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை, மத்திய ரயில்வே துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு, இம்மாநாடு பெரம்பலுார் எம்.பி., பாரிவேந்தருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டுக்கு 300 பேர் வீதம் தொடர்ந்து 4 ஆண்டுகளில், 1,200 மாணவர்களுக்கு, 128 கோடி ரூபாய் செலவில் இலவச உயர்கல்வி வழங்கிய பாரிவேந்தருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

திருச்சி௭ -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலுார் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுவாச்சூர் மற்றும் சிறுகனூர் பகுதியில் மேம்பாலங்கள், திருச்சி௭ – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லக்குடி, முளப்பதுகுடி – கீழப் பெருங்காவூர் மேம்பாலங்கள், பல இடங்களில் சுரங்கப்பாதைகள், சர்வீஸ் சாலைகள் அமைத்துக் கொடுத்ததோடு, குளித்தலை௭ மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில், 34 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளித்தலை சட்டமன்ற தொகுதியில், 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு, மாயனூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி, அப்பகுதி விவசாயிகள் பயன்பெற வேண்டுமென மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதற்காகவும், துறையூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பச்சமலையில், சைனிக் பள்ளி நிறுவ, நாடாளுமன்றக் கூட்டத்திலும் மற்றும் ராணுவத்துறை அமைச்சரிடத்தில் நேரில் வலியுறுத்தியதற்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 1974 ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை, மத்திய அரசு உடனே மீட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படும் புதிய ஆராய்ச்சிகளுக்கும். புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பினை மேம்படுத்தவும், நவீனப்படுத்துவதோடு, பெண் குழந்தைகளுக்கு போதுமான அளவில் தரமான கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மாணவர்களின் கற்றல் திறன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது, என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, தமிழக அரசு சீரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் மொழிப்பாடம், கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு 14 ஆண்டுகளாக போராடி வரும் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். 2021 தேர்தல் அறிக்கையில், தி.மு.க., சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை அதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். தமிழகத்தில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கத்தால், பல லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, எதிர்காலம் மிகப்பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தடுக்காவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் மிப்பெரிய சமுதாய சீரழிவை சந்திக்கும் என்பதை உணராத தமிழக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், மக்கள் தொகை குறைவாக உள்ள சமுதாயத்தினர் பெரிதும் பாதிக்கபடும் சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டாம். சரக்கு மற்றும் சேவை வரியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு குறைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்குவது போல், நெசவாளர்களுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்மிக நாடான இந்தியாவில் மக்களை ஒன்றுபடுத்தவும், மத நம்பிக்கையை ஏற்படுத்தவும் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் குழந்தை ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த பாரதப் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக தனுஷ்கோடி௭ தலைமன்னார்க்கும் இடையே கட்ட திட்டமிடப்பட்டுள்ள தரைப்பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *