திருச்சி முத்தரசநல்லூர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களிடம், வட்டார வள மையம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் (பிஆர்டி) கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் சிவனேசன் என்பவர் தான் மேக் யுவர்செல்ப் என்ற மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி நடத்தி வருவதாகவும், இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு 500 ரூபாய் வட்டியாகவும், 10 மாத முடிவில் அசல் தொகையை திருப்பி தருவதாகவும் தெரிவித்து பணத்தை பெற்றுள்ளார்.
திருச்சி கல்வி அதிகாரியாக பணியாற்றும் சிவனேசன் உடன் இணைந்து செல்வராஜ் என்பவரும் நம்பிக்கை வார்த்தை கூறி இது போன்று அரசு பள்ளி ஆசிரியர்களை குறிவைத்து பல லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.
இவர்களிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் முதல் நான்கு மாதங்களுக்கு, ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் வீதம் 500 ரூபாய் வட்டி தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி இவர்கள் தங்களுடைய சொத்து, நகை உள்ளிட்டவற்றை அடமானம் வைத்தும், வெளியில் கடன் வாங்கியும் 47 லட்சத்திற்கு மேல் ஒரு குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர்.இதுபோன்று பல அரசு பள்ளி ஆசிரியர்கள் பல லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் முறையாக பணம் கொடுத்து வந்த நிறுவனம் திடீரென்று பணம் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் இவர்கள் முதலீடு செய்த பல கோடிக்கணக்கான பணத்தையும் சுருட்டிக் கொண்டதாகவும், தங்களுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த மோசடியில் ஈடுபட்ட செல்வராஜ் மற்றும் சிவனேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பல்வேறு இடங்களில் பைனான்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மோசடி நடைபெற்று வருவதால் மக்கள் யாரும் அறியாமையில் சென்று ஏமார்ந்து விட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், மாணவர்களை வழி நடத்தும் மிகப் பெரும் பொறுப்பை கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்களே இத்தகைய மோசடியில் சென்று ஏமார்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நம்பிக்கை வார்த்தைகளை கூறி மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் மக்கள் கவனத்துடன் தங்களுடைய பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் விஷயம்.
ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் தருவதாகவும், 10 மாத முடிவில் அசல் தொகையை திருப்பி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட செல்வராஜ், சிவனேசன் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியும் தங்களுடைய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டிய மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
Comments