Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி முதல் காஷ்மீர் வரை!! ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் நம்ம ஊரு சாதனைப்பெண்!!

வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள். ஆறு முதல் 100 வயது வரை பேதமின்றி அனைவரையும் நலமுடன் காப்பவர்கள். எங்கும் கண்டதில்லை கடவுளை, ஆனால் எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை! இந்த மண்ணில் வாழும் கடவுள் மருத்துவர்கள். அவர்களை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதியை இந்தியாவில் மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தன் வீட்டையே ஏழைகளுக்காக மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி ராய் அவர்களின் பிறந்த நாளான இன்று தேசிய மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்முடைய திருச்சியிலிருந்து தற்போது காஷ்மீரில் ராணுவத்தில் மருத்துவராக பணி புரியும் சாதனைப்பெண் பற்றிய சிறப்புத் தொகுப்பை வெளியிடுவதில் திருச்சி விஷன் பெருமை கொள்கிறது!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தை சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணவேணி. தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். விடாமுயற்சி என்பதை இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றை அடைவதற்காக பல தடைகளை தாண்டி பயணித்து வருகிறார். நம்முடைய திருச்சியிலிருந்து சென்று இந்திய நாட்டையே காக்கும் கேப்டனாக அரும்பெரும் பணியை செய்து வரும்போது ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தமிழக லாரி டிரைவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்த போது அவர்களைத் தொடர்பு கொண்டு 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி தமிழகத்திற்கு வழியனுப்பி வைத்தவர். விடுமுறை நாட்களில் திருச்சி வந்தாலும் இங்குள்ள காப்பகங்களுக்கு சென்று இலவசமாக மருத்துவ முகாம்களை ஏற்படுத்துபவர்.

தான் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்து இன்றளவும் சமுதாய கடமையாற்றும் சாதனைப்பெண் டாக்டர் கிருஷ்ணவேணியிடம் பேசினோம்… “என்னுடைய ஊர் திருச்சி தான். எனக்கு பத்து வயது இருக்கும் போது அம்மா அப்பா இறந்துட்டாங்க. அப்புறம் நானும் அண்ணனும் மட்டும்தான் பாட்டி வீட்ல இருந்தோம். பின்பு பெரம்பலூரில் அரசு விடுதியில் தங்கி பள்ளிப்படிப்பை தொடங்கினேன். ஏழைக் குடும்பத்துல இருந்து வரதுனால எனக்கு நிறைய பேர் ஹெல்ப் பண்ணுவாங்க. என்னுடைய படிப்பை மட்டும் என்னுடைய ஆயுதமாக மாற்றி படிக்க ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியிலேயே 2வதாக வந்தேன்.

பின்பு அப்பா அம்மா இறந்ததற்கான காரணம் தெரிய வந்தது. அதன்பிறகு மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தேன். பின்பு அகரம் பவுண்டேஷன் மூலம் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆறு வருடங்கள் அங்கு படித்து முடித்தேன். இதற்கு முகம் தெரியாத பலரும் எனக்காக உதவி செய்தனர்.

மருத்துவப் படிப்பை முடித்தவுடன் தனக்கு இவ்வளவு பேர் உதவி செய்து படிக்க வைத்ததை தானும் இந்த சமுதாயத்திற்காக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்திய ராணுவத்தில் மருத்துவராவதற்காக விண்ணப்பித்திருந்தேன். பின்பு டெல்லியில் ஒரு வருடம். அங்கு சென்று ஹிந்தி ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது பின்பு கற்றுக்கொண்டு தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் கேப்டனாகவும் மருத்துவராகவும் வேலை செய்து வருகிறேன்.என்றார்

மேலும் அவர் அகரம் பவுண்டேஷன் என்னுடைய கனவை கைகோர்த்து நினைவாகக்கியது. சூர்யா மற்றும் கார்த்தி அண்ணா மிகவும் பெருமையாக இருக்கிறது எனக் கூறினார்கள். நான் விடுமுறை நாட்களில் திருச்சி வரும்போது இங்கு உள்ள கிராமங்களிலும், காப்பகங்களிலும்‌ இணைந்து இலவச மருத்துவ முகாம்களை அமைத்து அங்கு உள்ள மக்களுக்கும் என்னாலான உதவிகளை செய்து வருகிறேன். ராணுவத்தில் பணி புரிவதால் முதலுதவி செய்யும்போது மற்றும் பல சமயங்களில் துணிச்சலுடன் செயலாற்றி வருகிறேன்.என்றார்

நம்முடைய திருச்சியிலிருந்து விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்காக கேப்டனாக, மருத்துவராக, சமூக சேவகராக, பணிபுரியும் டாக்டர் கிருஷ்ணவேணி திருச்சியின் பொக்கிஷமே! இவரைப் பற்றி தேசிய மருத்துவர் தினமான இன்று வெளியிடுவதில் பெருமை கொள்கிறது திருச்சி விஷன் குழுமம்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *