“என் மண் – என் மக்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டார். மணப்பாறையில் தொடங்கியவர் பரப்புரை மேற்கொண்டு இரவு திருச்சியில் தங்கினார். பின்னர் இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில்…. நாகலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள். ஆனால், அவர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள் உப்பு போட்டு சாப்பிடுவர்கள் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவமானப்படுத்தியுள்ளார்.
அவரை தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. அவர் தொடர்ச்சியாக பொறுக்கிப் போன்று, ஆளுநரையும், என்னையும் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இவர் மீது தமிழகத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நாகலாந்தில் யாராவது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், 153அ என்ற சட்டப்பிரிவில் அவரை ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு கைது செய்து, நாகலாந்து அழைத்துச் சென்றுவிடலாம் என்றார்.
தமிழகத்தில் காவல்துறையின் கவனம் சிதறி போயிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதனை நான் தொடர்ந்து கூறி வருகின்றேன். தமிழக காவல்துறையை பொறுத்தவரை பாரதி ஜனதா கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும். பிஜேபி காரனை பிடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
பேருந்தில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு போவதை ஓட்டுநரும் கேட்கவில்லை, நடத்துனரும் கேட்கவில்லை, வேறு யாரும் கேட்கவில்லை பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த பெண்மணி சமூக அக்கறையுடன் கேட்டுள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் கேட்டது நியாயம். நீதிபதி அதனை பார்த்து தான் அவருக்கு பெயில் கொடுத்துள்ளார்.
பள்ளி மாணவர்களை அமர வைத்து ரெக்கார்ட் டான்ஸ் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர். தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் நாங்கள் மக்களை சென்று சந்தித்து வருகிறோம். எல்லா இடங்களிலும் கூட்டமாக மக்கள் எங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
Comments