Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

தொடக்கம் சரியாக அமைந்து விட்டால் மாணவர்களின் வாழ்க்கை நிச்சயம் வெற்றி பெறும் – நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஜெயராணி

திருச்சியில் 2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான நல்லாசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கும் நேற்று முன்தினம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் விருதுகளை வழங்கினார். விருது பெற்ற மணிகண்டம் ஒன்றியம் எடமலைப்பட்டிபுதூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெயராணி தன்னுடைய அனுபவம் குறித்து  நம்மோடு பேசுகையில்… 1999 இல் இடைநிலை ஆசிரியராக அரியலூர் மாவட்டத்தில் என்னுடைய ஆசிரியர் பணியை தொடங்கினேன். 2004 இல் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 17 ஆண்டுகளாக இப்பள்ளியில்  பணியாற்றி வருகிறேன்.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை போல குழந்தைகளுக்கு சிறுவயதில் சொல்லிக் கொடுப்பதை தான் அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தை பருவத்தில் இருந்தே  ஆரோக்கியமான சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவர்களுடைய தொடக்கம் சரியாக அமைந்து விட்டால் அவர்களுடைய அடுத்தகட்ட வாழ்க்கை முறை என்பது ஒரு நல்ல பாதையை நோக்கி பயணிக்கும். எனவே அக்கால கட்டத்தில் அவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறேன். என்னைப் போன்றே என் பள்ளியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர். கொரோனா  காலகட்டத்திலும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து  மாணவர்களின் கல்வி கற்றலில் எவ்வித தடையும் ஏற்படாத வண்ணம் இணையவழி  வகுப்புகளை தொடர்ந்தோம்.

செல்போன் வசதி இல்லாத மாணவர்களுக்கு அருகில் உள்ள முன்னாள் மாணவர்கள் மூலமும்   நாங்களும்  நேரடியாக சென்று மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்தோம். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 800 ஆக உயர்வதற்கும் ஒவ்வொரு ஆசிரியர்களின் பங்கும் அளப்பரியது. பள்ளியில் மெய்நிகர் வகுப்பறை  வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பேரிடர் காலகட்டத்தில் மாணவர்களுடைய திறன்களை வளர்ப்பதிலும், எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இணைய வழியிலேயே போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்காக குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி 40 என்ற செயலின் மூலமும் கல்வி கற்பித்து வருகிறோம். எவ்வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு எங்களால் உதவிட முடியுமோ அத்தனை முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகின்றோம். இந்த விருதானது இன்னும் ஊக்கத்தோடு செயல்படுவதற்கான ஓர் ஆற்றல் கருவியாக கருதுகிறேன். அதேசமயம்  இந்த விருதானது என் பள்ளிக்கான அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன். தொடர்ந்து பயணித்திட ஊக்குவித்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் என் பணியை சிறப்பாக செய்து என்னுடைய நன்றியை வெளிப்படுத்துவேன். இந்த விருதானது மனதிற்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *