திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (22.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.492.55 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட மற்றும் கூடுதல் பணிகளை மேற்கொள்ள திருத்திய நிர்வாக அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிகட்டுகள் அமைக்கும் பணிகள். பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் எல்.ஈ.டி திரை அமைக்கும் பணிகள்,
கூரைப் பகுதியில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தல், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் அமைத்தல் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து இப்பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் மேலும் எதிர்காலத்தில் கூடுதல் பயணிகளை கையாளும் தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமையவுள்ளதால் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விரைந்து இப்பணிகளை முடிப்பதற்கும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் நகராட்சி நிருவாக மேலாண்மை இயக்குநர் சு.சிவராசு, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments