தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிபிசிஐடி,சிபிஐ விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை மெற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க சுவரொட்டிகள் ஒட்டி போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், கரூர், திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களிலும், காவல்நிலையங்களின் அறிவிப்புப் பலகையிலும் சுவரொட்டி ஒட்டி விசாரித்து வந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் மாருதி சுசுகி வெர்ஷா கார் முக்கியமான தடயமாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெர்ஷா கார் உரிமையாளர்கள் 60பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனை தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அடுத்தக்கட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்த்த நிலையில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த எம்எல்ஏ எம்கே பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இவர்கள் பல்வேறு முக்கிய கொலை வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் என சிறப்பு புலனாய்வு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவர்களுக்கு கிடைத்த துப்பு அடிப்படையில் இந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த கொலை வழக்கில் சூடு பிடித்துள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments