Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மலைக்கோட்டை விரைவு இரயிலை மீண்டும் ஒன்றாம் எண் நடைமேடையில் நிற்கும்படி செய்ய வேண்டும்- துரை வைகோ

எனது திருச்சி தொகுதியில், அம்ரிட் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஶ்ரீரங்கம் இரயில் நிலையத்தை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்த விழாவில், இன்று (22.05.2025) காலை 9:30 மணியளவில் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்று உரையாற்றினேன்.

இரயில்வே பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை மேம்படுத்துவதற்காக இரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அம்ரிட் பாரத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளது ஒன்றிய இரயில்வே துறை. அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட 103 இரயில் நிலையங்களில் எனது நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஶ்ரீரங்கம் இரயில் நிலையமும் தேர்வாகி, அதில் ரூபாய் 6.77 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளன. அதனை பிரதமர் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் மற்றும் தென்னக இரயில்வே மேலாளருக்கும், திருச்சி கோட்ட மேலாளர் திரு. அன்பழகன் அவர்களுக்கும் மற்றும் இரயில்வே அதிகாரிகள் அனைவருக்கும் எனது திருச்சி தொகுதி மக்களின் சார்பாக என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 15 ஆண்டு கால கோரிக்கையாக இருந்த சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள G – கார்னர், கொள்ளிடம் – ஶ்ரீரங்கம் சாலையில் உள்ள Y – ஜங்ஷன், சஞ்சீவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சுரங்கப்பாதை அமைப்பதற்கு எனது கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஒப்புதல் அளித்துள்ளது. G – கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க நிலம் கொடுப்பது உள்ளிட்ட தேவையான ஆதரவை வழங்குவதாக திருச்சி கோட்ட இரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளனர். அதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

அது மட்டுமல்லாமல், பல இடங்களில் இரயில்வே மேம்பாலங்களும், வாகன சுரங்கப்பாதைகளும் அமைப்பதற்கு என்னுடைய கோரிக்கையை ஏற்று பணிகளை தென்னக மற்றும் திருச்சி கோட்ட இரயில்வே துறை தொடங்கியிருப்பதற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.சமீபத்தில் இரயில்வே துறை அமைச்சரைச் சந்தித்து திருச்சியிலிருந்து பெங்களூரு, கொச்சின், திருப்பதி உள்ளிட்ட மூன்று நகரங்களுக்கு புதிய இரயிலை இயக்கித் தரும்படி கோரிக்கை வைத்தேன். அப்போது ஒன்றிய அமைச்சர் அவர்கள் இந்த மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள், அதனை நிறைவேற்றித் தருகிறேன் என்றார். அப்போது நமது பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க, திருச்சி – திருப்பதி இரயிலை நான் தேர்ந்தெடுத்து, அதை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். அந்த நல்ல செய்தியை இந்த பெருமாளின் சன்னதியிலிருந்து தெரிவிக்கிறேன். இந்த கோரிக்கையை மீண்டும் அமைச்சருக்கு நினைவுபடுத்தி விரைவில் அந்த இரயிலை கொண்டுவருவேன் என்று உங்கள் முன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் திருச்சி இரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். அதற்கு முன் சந்தேகத்தோடுதான் இருந்தேன், ஆய்வுக்கு பின் நமது திருச்சி இரயில் நிலையத்திற்கு 100-க்கு 90 மதிப்பெண்கள் வழங்கினேன். அந்த அளவிற்கு சிறப்பாக நிருவகிக்கப்படுகிறது.மிக முக்கியமாக, திருச்சி பொன்மலை கோல்டன் ராக் தொழிற்சாலையை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைப் போல மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். சமீபத்தில் ஒன்றிய இரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் கோல்டன் ராக் பணிமனை மேம்பாட்டிற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கி, வந்தே பாரத் போன்ற இரயில்களை பழுது நீக்கும் பணிமனையாக தரம் உயர்த்தித் தந்திருக்கிறது. இதனால் திருச்சி வழியாக இன்னும் அதிக வந்தேபாரத் இரயில் சேவை கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்காகவும் இரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

திருச்சியின் முக்கிய பகுதியில் இருந்த குறுகலான மேரிஸ் மேம்பாலத்தை விரிவாக்கும் பணியில், பழைய பாலத்தை இடிப்பதில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், நான் நமது இரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை வைத்து அதனை இடித்துத் தரும்படி கேட்டிருந்தேன். ஒரு மாத காலத்தில் இடித்துத் தருகிறேன் என்று வாக்களித்தவர் 15 நாளில் கடந்த 13-ஆம் தேதி அன்று அந்தப் பாலத்தை இடித்து பெரிய பாலம் கட்டுவதற்கான வழிவகை செய்து கொடுத்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.எனது இரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து அதனை செய்து தர முன்வரும் ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் மற்றும் தென்னக இரயில்வே மேலாளருக்கும், திருச்சி கோட்ட மேலாளர் திரு. அன்பழகன் அவர்களுக்கும் மற்றும் இரயில்வே அதிகாரிகள் அனைவருக்கும் எனது திருச்சி தொகுதி மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விழாவில் உரையாற்றிய முன்னாள் இராணுவ வீரர் அவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், இன்னால் முன்னால் இராணுவ வீரர்களுக்கான கோட்டா இரயில் பயண முன்பதிவில் ஒதுக்கித்தரும் இடங்கள் போதுமானதாக இல்லை. அதனை அதிகப்படுத்தித்தருமாறு கேட்டுள்ளார். இராணுவ வீரர்கள் இல்லாமல், நாடு இல்லை; நாடு இல்லாமல், நாம் இல்லை. எனவே ஒன்றிய அமைச்சருக்கு இந்த கோரிக்கையை நான் எடுத்துச் சென்று நிறைவேற்றித் தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.இரண்டு கோரிக்கைகளை திருச்சி இரயில்வே கோட்ட மேலாளருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். 

முதலில், திருச்சி மாநகர் மற்றும் அருகில் உள்ள மணப்பாறை, பூங்குடி, இனாம்குளத்தூர் போன்றவை மதுரை இரயில்வே கோட்டத்திலும், ஜீ ஆர் புரம், முத்தரசநல்லூர் உள்ளிட்ட சில பகுதிகள் சேலம் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இதனால் நிருவாகரீதியாக உள்ள சிரமங்களை நீக்க அந்த பகுதிகளை திருச்சி இரயில்வே கோட்டத்தோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.மலைக்கோட்டை விரைவு இரயில் திருச்சியில் ஒன்றாம் எண் நடைமேடையில் வந்து நிற்கும்படி கோரிக்கை வைத்திருந்தேன். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு சிறிது நாட்கள் அந்த நடைமேடையில் வந்து நின்றது. ஆனால் இப்போது மீண்டும் நான்காம் நடைமேடைக்கு மாற்றப்பட்டுவிட்டது. அதிகாலை 4:50-க்கு சென்னையிலிருந்து வந்து சேரும் அந்த இரயிலில் முதியவர்களும் பெரியவர்களும் நான்காம் நடைமேடையிலிருந்து வெளியேறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

எனவே மலைக்கோட்டை விரைவு இரயிலை மீண்டும் ஒன்றாம் எண் நடைமேடையில் நிற்கும்படி ஆவன செய்ய வேண்டுமாய் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த அம்ரிட் பாரத் திட்டத்தின் மூலமாக எனது தொகுதியில் ஶ்ரீரங்கம் இரயில் நிலையத்தை மேம்படுத்தித் தந்த மாண்புமிகு பிரதமருக்கும், மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும் மற்றும் இரயில்வே துறை அதிகாரிகள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து அமர்கிறேன். நன்றி. வணக்கம். என்று உரையாற்றினேன். அதன் பின் ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் அம்ரிதட் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை பார்வையிட்டேன். அதில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தேன். அந்த ஆய்வின் போது திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரும் இரயில் நிலைய அதிகாரிகளும் உடன் இருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *