திருச்சி அருகே பால் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை – 3 லட்சம் பணம் திருட்டு.உரிமையாளர் கண் முன்னே தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி மருதமுத்து நகரை சேர்ந்தவர் அன்வர் பாஷா மகன் ஜெய்லானி ஜாவித்(38)பால் வியாபாரியான இவர் இன்று அதிகாலை தொழுகை செய்வதற்காக பள்ளிவாசலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது திடீரென வீட்டிற்குள் இருந்து மூன்று மர்ம நபர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.
அவர்களை பின்தொடர்ந்தது ஓடி ஜெய்லானிஜாவித் பிடிக்க முயன்றுள்ளார். இருப்பினும் மூன்று மர்ம நபர்களும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து ஜெய்லானி ஜாவித் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை, 3 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது.
உடனடியாக நடந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் ஜெய்லானி ஜாவித் கூறவே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருடர்களை பிடிக்க அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்று கரையோரங்களில் தேடினர்.அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்வியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் திருட்டு சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த வீட்டை மோப்ப நாய் மோப்ப மிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொதுமக்கள் பிடித்து கொடுத்த தீனதயாளன் என்ற நபரை ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தின்போது பொதுமக்கள் கூறியதாவது, கடந்த சில வாரங்களாக தாளக்குடி பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் கடந்த ஒரு மாதங்களில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் நகை, பணம் திருடு போனதுடன் ஒரு சில வீடுகளில் திருட்டு முயற்சியும், ஒரு சில வீடுகளில் திருட்டு முயற்ச்சியின்போது மர்ம நபர்களால் வீட்டின் உரிமையாளர்கள் தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்றனர். இதனால் தாளக்குடி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே வசிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.
எனவே கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து வேறு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து போலீசை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments