திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் அம்மா முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் செந்தில்நாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ராஜசேகர் கூறுகையில்….. திருச்சி பஞ்சப்பூரில் வரவுள்ள புதிய பேருந்து நிலையம் அமைச்சர் நேருவால் கொண்டு வரப்பட்டது என்றும், அந்தப்பகுதியில் அவருக்கு 100 ஏக்கர் நிலம் இருப்பதால்தான் இந்த திட்டம் அந்த இடத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.
திருச்சியைப் பொறுத்தவரை அமைச்சர் செல்வராஜால் அடையாளம் காட்டப்பட்ட நேரு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் அரசியலில் வளரவிடாமல் அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். திருச்சி மாவட்டத்தில் திமுகவுக்காகக் கடுமையாக உழைத்த முத்திரையர், கள்ளர், தேவர் இன முக்கியஸ்தர்கள் பலரையும் நேரு ஒழித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். லால்குடி, தொட்டியம், முசிறி பகுதிகளில் தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே பதவிகளில் அமர்த்துவதாகவும், இதனால் பிற சமூகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் ராஜசேகர் தெரிவித்தார்.
தனது தம்பி ராமஜெயம் எம்.பி சீட் கேட்டபோது அவருக்குக் கொடுக்காமல், அதனை நெப்போலினுக்கு கொடுத்ததாகவும் இப்போது தனது மகனுக்கு எம்பி சீட் வாங்கிக் கொடுத்திருப்பதால் ராமஜெயம் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் ராஜசேகர் கூறினார். இந்த தேர்தலுடன் நேருவின் பணபலம், அதிகார பலம் எல்லாம் முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்ட ராஜசேகர், நேருவுக்கு தற்போது இவ்வளவு சொத்து சேர்ந்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி விசாரணை நடைபெறும் என்றும் அதிலிருந்து தப்புவதற்காக நேரு பிஜேபியில் சேருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அமமுக நிர்வாகி ராஜசேகர் தெரிவித்தார். அமைச்சர் நேரு மீது, அவரது கட்சி நிர்வாகிகளையே மேற்கோள் காட்டி ராஜசேகர் சுமத்திய குற்றச்சாட்டுகள், உள்ளூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments