பொங்கல் பண்டிகை நாளை (15.01.2023) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய கூடியவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கக்கூடிய திருச்சியிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி திருச்சியிலிருந்து அதிகளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பேருந்து பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சி மாநகரில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் செல்வதற்காக ஏராளமான பயணிகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
இதில் திருச்சி சோனா – மீனா திரையரங்கு எதிரே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 1000க்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்தனர். இந்த தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் போதிய பேருந்து இல்லாததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாக கூறி அதிகாலை 500க்கும் மேற்பட்ட பயணிகள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அருகில் இருந்த போக்குவரத்து பணிமனையில் இருந்து கூடுதலாக பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சியில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என தெரிவித்தது நிலையில், போதிய பேருந்து வசதி இல்லை என கூறி அதிகாலையில் பயணிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments