திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திருவிழா காலங்களில் சாராயம் ஊறல் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் உதவி எண் (Help Line) 9487464651 மூலம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், வருண் குமாரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புகாருக்கு உள்ளான கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பச்சப்பெருமாள்பட்டி தங்க நகரில் வசித்து வரும் மாரப்பன் மகன் சாமிகண்ணு (60) என்பவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 1050 லிட்டர் சாராயம் ஊறல், விற்பனைக்காக வைத்திருந்த 30 லிட்டர் சாராயம், சாராயம் தயாரிக்க பயன்படும் ட்ரம் 2, நாட்டுச்சக்கரை 7-1/2 கிலோ, விற்பனைக்காக வைத்திருந்த 1 லிட்டர் அளவுள்ள 60 சாராய பாட்டில்கள் , 2சிலிண்டர்கள், ஒரு ஸ்டவ், சாராயம் ஊறல் போட பயன்படுத்தப்படும் 200 லிட்டர் அளவுள்ள 10 பேரல்கள், கடுக்கா கொட்டை ஒரு கிலோ மற்றும் சுக்கு – 1/2 கிலோ ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படையினர் கைப்பற்றினர்.
ஆயினும் கள்ளச்சாராயத் தயாரிப்பில் ஈடுபட்ட சாமிக்கண்ணு தப்பி ஓடி தலைமறைவாக இருந்து வருகிறார். தப்பியோடிய சாமி கண்ணு குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. யாருடைய உதவியும் இன்றி சாமி கண்ணு மட்டும் கள்ளசாராய தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்களுக்கான பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூடுதல் முறை பயிற்சி பெற்ற சாமிக்கண்ணு, தான் பெற்ற பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு திராட்சையால் Organic illicit arrack எனப்படும் இயற்கை கள்ள சாராயத்தை தயாரித்துள்ளார்.
அதற்கு தேவையான உபகரங்கள் அனைத்தையும் அவரே தயாரித்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாமிக்கண்ணு சாராய தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது குக்கர் வெடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments