108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த டிசம்பர் 12-ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து டிசம்பர் 13ஆம் தேதி முதல் ஜனவரி 22-ம் தேதி நேற்று வரை வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் வைபவம் நடைபெற்றது.
இந்நாளில் நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான (23-12-2023) இன்று அதிகாலை 3:00 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4:00 மணியளவில் புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர்.
பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று அடைகிறார்.
சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்டவரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மாநகராட்சி உடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா 2ம் தேதி இனிதே நிறைவடைகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments