திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த தேவர்மலை கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்த பிரிவினரின் மயானத்திற்கு செல்வதற்கு பொதுபாதை இல்லை.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலம் மற்றும் தனியார் நிலத்தின் பாதை வழியாக இறந்து போனவர்களின் உடலை எடுத்து மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் நிலத்தின் வழியாக உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மயானத்திற்கு இறந்தவரின் உடலை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது.
அறநிலையத்துறை நிலத்தின் வழியாக மயானத்திற்கு பாதை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பிடாரமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர் முருகேசன் தலைமையில் இன்று பொதுமக்கள் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பல ஆண்டுகளாக மயானத்திற்கு பாதை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தற்போது வரையிலும் பாதை அமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒரு மாத காலத்திற்குள் மயானத்திற்கு பொதுபாதை அமைக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற (24.07.2024) அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க உள்ளதாக அந்த மனுவில் கூறி உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments