தற்போதைய கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில், நோய்த் தொற்று அபாயம் இருந்தும் தன்
உயிரை துச்சமென நினைத்து 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் 6,000 தொழிலாளர்கள் முன்களப்
பணியாளர்களாக கொரோனா நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றோம். இந்தப் பணியில் ஆம்புலன்ஸ் திட்டத்தின் P.கணேசன்,
P.செல்வம் மற்றும் P.பிரபு ஆகிய 3 தொழிலாளர்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழக அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் இந்தப் பணியில் உயிரிழந்த முன்களப்
பணியாளர்களின் குடும்பம் நிர்க்கதியாக நிற்கும் அவலம் நிலவுகின்றது.
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளை நேரடியாக கையாண்டு உயிரிழந்துள்ள ஆம்புலன்ஸ் தொழிலாளர் குடும்பங்களுக்கு, இதுவரை தமிழக அரசு சார்பாக எந்த நிவாரணமும்
அறிவிக்கப்படாதது வருத்தத்தை அளிக்கின்றது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு 02.06.2021 அன்று எங்களது தொழிற்சங்கம் சார்பாக மின்னஞ்சல் மூலம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அடிப்படையில், கொரோனா நோய் தாக்கப்பட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் நிதி உதவியும் வழங்க வேண்டுகிறோம்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு உடனடியாக சமூக பாதுகாப்பு திட்டம் கிடைத்திட இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாரதீய மஸ்தூர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஹரிபிரசாத் தலைமையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments