Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்படும் குழிகளை அப்படியே விட்டுச் செல்லும் மாநகராட்சி-  பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி உறையூர் 57 வது வார்டு திருத்தாண்தணி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிக்காக சுமார் 25 நாட்களுக்கு மேல்  தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து திருத்தாந்தோனி பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசியான  சுகுமார் கூறுகையில், “இதுபோன்று நடப்பது  ஆச்சரியத்திற்கில்லை. கிட்டத்தட்ட 4-5 ஆண்டுகளாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

பாதாள சாக்கடைபணி  என்று கூறி   மாதத்திற்கு இரண்டு முறை இப்பகுதியில் குழுதோண்டிவிட்டு அப்படியே விட்டுசென்றுவிடுவார்கள். அதனை பின்னர் மக்கள் போராட்டம் செய்து அல்லது மக்களின் கோரிக்கையை ஏற்று  அப்போதைய நடவடிக்கையாக தற்காலிகமாக  சரி செய்துவிட்டு செல்வார்களே  தவிர நிரந்தரமாக இதற்கான நடவடிக்கைககளை  திருச்சி மாநகராட்சி செய்வதில்லை. இப்போது கூட இந்த பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட இக்குழியினை  சுற்றி பேரிகார்டுக்கூட அமைக்காமல் மாநகராட்சி குப்பை வண்டியை கொண்டு வந்து விட்டு சென்று பாதுகாப்பு நடவடிக்கை என கூறுவது மிகவும் அவல நிலையையாய் இருக்கின்றது ” என்றார். 

மாநகராட்சி எந்த ஒரு செயலிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது கிடையாது எனவும் மக்களின் நலனுக்காக மாநகராட்சி  செயல்படுகிறதா என்றால் அது கேள்விக்குறிதான் எனவும் அப்பகுதி மக்கள் காட்டமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 

இதை போன்றே ஆசாரி தோப்பு பகுதியிலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பாதாள சாக்கடை நீர் உடைந்து சாலை முழுவதும் சாக்கடை நீர் வழிந்தோடுகிறது. இதனால் அப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதேபோன்று கோணக்கரை,குடமுருட்டி   பகுதியில்குப்பைகளை சாலைகளில்  கொட்டி  அரியமங்கலம் குப்பைமேடு போலவே உருவாகி கொண்டிருக்கிறது.

கொரானா காலகட்டத்தில் நோய் தொற்று பரவும் என்று எச்சரிக்கை விடுக்கும் மாநகராட்சி, இது போன்ற குப்பை கூளங்களை சுற்றி இருப்பதால் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு பல்வேறு  நோய்த்தொற்று ஏற்படும் என்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது எவ்வகையில் சரியானதாகும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

மேலும் பேசிய திருத்தாண்தனி பகுதியின்  சுகுமார்,

“பலமுறை மாநகராட்சியிடம் நேரடியாக சென்ற மனு  அளித்துவிட்டோம்,  அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து விட்டு தெருவில் இறங்கிப் போராடவும் செய்து விட்டோம். இருந்தும்,  அரசு இதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொறுப்பை தட்டிக்கழிக்கும் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.  இந்த பகுதியில்  புதிய சாலை போடுதல் என்பது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

சாலைகளில் குழி ஏற்பட்டால் அதனை மட்டுமே வந்து சரி செய்து செல்கின்றனர் தவிர புதியதாக எதையும் அமைப்பது கிடையாது இது போன்ற எந்த ஒரு பிரச்சினைகளிலும் மாநகராட்சி நிரந்தர தீர்வினைவிடுத்து தற்காலிக தீர்வு மட்டுமே தேடுவது மிகவும் ஆபத்தான ஒன்று. மக்களின் வரி பணத்தை  இப்படி செலவு செய்யாமல் நிரந்தரமான தீர்வை மக்களுக்கு அளிப்பது மாநகராட்சியின் கடமை என்று உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *