திருச்சி மாநகரில் மொத்தம் 22 காவல் நிலையங்கள் உள்ளது. தற்போது கோவிட் தொற்று இரண்டாவது அலை பரவலை தடுப்பதற்கு காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் 24 மணி நேரமும் வாகன தணிக்கை ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திருச்சி மாநகரிலும் காவல்துறையில் உள்ளவர்களுக்கும் கோவிட் தொற்று பாதிப்பு தினமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே தமிழக காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில் ஏபிசி ஷிப்ட்டுகள் அறிவிக்கப்பட்டது. திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏபிசி ஷிப்ட்டுகளை முறைப்படுத்தி 22 காவல் நிலையங்களுக்கும் அறிவித்தார். ஒரு சில காவல் நிலையங்களில் மட்டுமே ஏபிசி ஷிப்ட்டுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. மற்ற காவல் நிலையங்களில் கடைபிடிக்காததால் காவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
8 மணி நேரம் பணி செய்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று நான்கு மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்க முடிகிறது. மீண்டும் 8 மணி நேர பணிக்கு வருவதால் தங்களுடைய எதிர்ப்பு சக்தியும் குறைந்து நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதாக சிலர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் காவல்துறையினர் பணியில் உள்ள பளுவின் காரணமாக தங்களிடம் கோபத்தை காண்பிப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக போலீசாருக்கு உரிய ஓய்வு கொடுத்து அவர்களை பணியில் திறம்பட பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையரை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆயுதப்படை காவலர் ஒருவர் அவசர பணி அழைப்பின் காரணமாக வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக மாநகர காவல் ஆணையர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் போலீசார் காத்திருக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments