திருச்சி மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில், மேலாளர் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கையாளுவதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறி பேருந்துகளை இயக்க மறுத்து தொழிலாளர்கள் பணிமனை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராம பகுதிக்கும், அண்டை மாவட்டங்களும் என 54 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பணிமனையில் சுமார் 300 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பணிமனையில் மேலாளராக பணியாற்றி வரும் மகேந்திரன் என்பவர், தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கையாளுவதாகவும், தொழிலாளர்கள் விரோத போக்குடன் நடந்துக்கொள்வராகவும் இதனால் பணியில் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும் கூறி மேலாளரை கண்டித்து
இன்று (21.06.2022) பணிமனையிலிருந்து எந்த பேருந்துகளையும் இயக்காமல், பணிக்கு செல்ல மறுத்து தொழிலாளர்கள் பணிமனை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். 37 பேருந்துகள் இதுவரை பணிமனை விட்டு வந்திருக்கவேண்டும் ஒரு பேருந்து கூட வெளியே வரவில்லை.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்றுள்ள டி.எஸ்.பி.ராமநாதன் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தலைமையிலான இருத்தரப்பு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments