திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் பல பேரிடம் விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 13 ரவுடிகளை உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தது. இதில் பிரபல ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், மயிலாடுதுறை கலைவாணன், லெப்ட் செந்தில் என 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றதத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்ட 13 ரவுடிகள் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு துணை கண்காணிப்பாளர் மதன் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகினர். ரவுடி ராஜ் சார்பில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் நீதிபதி சிவக்குமாரிடம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கூறுகையில்…. ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்த மனுவில் ராமஜெயத்தின் உறவினர்களோ அல்லது அவரது மனைவியோ 13 நபர்களிடம் உண்மை கண்டறிய சோதனை நடத்த கோரி இருக்க வேண்டும் . ஆனால் எந்த முகாந்திரம் இல்லை. இந்த கொலை வழக்கில் சந்தேகப்படக்கூடிய நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்யாமல், விசாரணை அதிகாரி டிஎஸ்பி மதன் தாக்கல் செய்திருக்கிறார் என வாதிட்டார்.
இதனை தொடர்ந்துஇதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், வழக்கின் விசாரணை குறித்து வருகிற 07.11.2022 தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார்.
பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸ்சியஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்…… முக்கியமாக ராமஜெயம் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று அவர் உறவினர்கள் குறிப்பிடவில்லை. உடற்கூறு ஆய்வில் அவர் மதுகுடிப்பவர் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றார். மேலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் பொழுது தங்களது தரப்பில் ஒரு மருத்துவரும் வழக்கறிஞரும் அனுமதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம்.
13 பேரிடம் இந்த சோதனை நடத்துவதற்கு ராமஜெயத்தின் மனைவியோ அல்லது அவரது உறவினர்களோ யாரும் தெரிவித்ததாக சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்படவில்லை மேலும் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அதற்கு முழு ஒத்துழைப்பும் தங்களை தரப்பில் வழங்குவோம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments