திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லணை சாலை இணையக்கூடிய பகுதியில் சாலையை கடந்து செல்ல கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே அப்பகுதியில் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (24). இவர் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் வேலை முடித்து வீடு திரும்பும் போது சஞ்சீவி நகர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற போது, சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் விக்னேஷ் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே தங்களது கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ளாமல் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உறவினர்கள் விக்னேஷின் சடலத்தை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் போராட்டத்தை கைவிடமுடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தினால் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு புறமும் வாகனங்கள் நிற்கின்றன. சஞ்சீவி நகரில் இருந்து சென்னை செல்லும் மார்க்கம், மதுரை மார்க்கம் செல்லும் வாகனங்கள் சாலையில் சிக்கித் தவிக்கின்றன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments