நம்மாழ்வார் நினைவு நாளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ள காவேரி கூக்குரல் இயக்கம்.
நம்மாழ்வார் ஐயாவைப் போற்றம் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக திருச்சி மாவட்டம் துறையூர், முசிறி மற்றும் மணப்பாறை தாலுகாவில் உள்ள மரவிவசாயிகள் அவர்களின் விவசாய நிலங்களில் 4300 டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் பாரம்பரிய விவசாய முறைகளை மீட்டெடுத்து மண் வளம் காப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்புரிந்தவர் நம்மாழ்வார் ஐயா அவர்கள், அவர் நம்மோடு வாழ்ந்த காலத்தில் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல் புரிந்தவர். மண்ணை வளமாக வைத்து கொள்ள நாட்டு மாடுகளும், மரங்களும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நம்மாழ்வார் அவர்கள் இயற்கை தொடர்பான பணிகளில் மட்டுமல்லாது ஈஷாவின் யோகப் பயிற்சிகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஈஷாவில் கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகளை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர்.
நம்மாழ்வார் அவர்களின் பாதையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதில் ஈஷா மண் காப்போம் இயக்கமும், விவசாய நிலங்களில் மரவளர்ப்பு பணியை முன்னெடுப்பதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கமும் பெரியளவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் விவசாயிகளுக்கு தேவையான டிம்பர் மரக்கன்றுகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்று பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு மரக்கன்று 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
சத்குரு அவர்கள் நம்மாழ்வார் ஐயாவை பற்றி கூறும்போது “பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால் மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர். நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர். ஈஷா விவசாய இயக்கத்தின் தொடக்க காலங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” என பகிர்ந்திருக்கிறார்.
நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சம் மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது. சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம்சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயம் செய்வதன் மூலம் மழை தருவிக்க மரங்கள், மண்வள மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல், ஆற்று வடிநிலப் பகுதிகளில் தொடர்ந்து மரங்கள் நடுவதன் மூலம் நதிகளின் நீர் பிடிப்பு அதிகரித்து நதிகள் மீட்டுறுவாக்கம் பெறும். முக்கியமாக காவேரி ஆற்றின் வடிநில பகுதிகளில் அடுத்துவரும் 12 ஆண்டுகளில் விவசாய நிலங்களில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் 4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 76 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments