Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

என் வாழ்நாளில் அதிக நாட்களை செலவிட்டது பள்ளிகளில் தான் – தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள திருச்சி தலைமை ஆசிரியர் ஆஷா தேவி

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளில், நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் பிராட்டியூர் மாநகராட்சி  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆஷா தேவியும் ஒருவர். 

இவ்விருது குறித்து ஆஷா தேவி நம்மிடம் கூறியதாவது… 2010ல் பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது பள்ளியில் 71 இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 816 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு கல்வியை தாண்டி ஆங்கில பேச்சு பயிற்சி யோகா, சிலம்பம், கராத்தே உட்பட 10க்கும் மேற்பட்ட அதிகமான தனித் திறன் பயிற்சிகளை வழங்குவதும் ஒரு மிக முக்கிய காரணமாகும்.

வறுமையைக் காரணம் காட்டி அரசு பள்ளி மாணவர்களின் திறமையை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதே அவர்களுடைய வெற்றிக்கு தடையாக இருக்கிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக திறமை உள்ளவர்கள்  சிறந்த வாய்ப்பும், பயிற்சியும் கிடைக்குமாயின் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டேன். பள்ளிகளில் அளிக்கப்பட்ட பயிற்சியால் பல்வேறு போட்டிகளிலும் எங்கள் பள்ளி மாணவ – மாணவிகள் சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.

இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளி நிர்வாகத்திற்கு தேவையான முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். கொரோனா காலத்திலும் மாணவர்களுக்கு தொய்வில்லா கல்விச்சேவை வழங்க  ஆன்லைன் மற்றும் 15 வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் பாடங்களை நடத்தி வருகிறோம். செல்போன் இல்லாத மாணவ – மாணவிகளுக்கு சுழற்சி முறையில் பாடத்தை நடத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தனியார் பள்ளிகளில் இருந்து 526 பேர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். எங்கள் பள்ளிக்கு கூடுதல் இடவசதி கேட்டும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

என் வாழ்நாளின் அதிக நாட்களை பள்ளிகளில் தான் செலவிட்டேன். 1988-ல் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, 2003-ல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2009-ல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு கிடைத்தது. 2010-ல் பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். கிட்டத்தட்ட 33 ஆண்டு காலம் பள்ளி மாணவர்களோடு என் பயணம் தொடர்கிறது. என் குடும்பத்திற்கு நிகராக பள்ளி மாணவர்களையும் நேசிக்கிறேன்.

2013ல் மாநில நல்லாசிரியர் விருது உட்பட 17 க்கும் மேற்பட்ட விருதுகள் பெறுவதற்கு மாணவர்களின் அன்பும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புமே காரணம். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் கூடுதலாக மாணவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்பதற்கு இந்த விருது ஊக்க சக்தியாக அமையும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *