Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாணவர்கள் தவறு செய்தால் நிச்சயம் கண்டிக்கப்படுவார்கள் திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…. பள்ளி மேலாண்மை குழு  2009 ஆம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த ஒன்று தான் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். தற்போது அதை மீண்டும் உருவாக்கி இருக்கிறோம். 20 பேர் அடங்கிய குழுவின் தலைவராக மாணவர் ஒருவரின் தாய் இருப்பார். மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தப்படும். பள்ளிக்கூடம் தன்னிறைவு பெற்று இருக்கிறதா, அடிப்படை வசதிகள் இருக்கிறாதா என்பதை ஆராய வேண்டும், கல்வி கற்காமல் இருப்பவர்கள், பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்டவை தான் இந்த குழுவின் நோக்கம்.

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்பு 1,85,000 பள்ளி இடை நின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் இணைத்துள்ளோம். பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட 4300 கோடி அதிகம் இந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்கிற அடிப்படையில் செயல்படுகிறோம் என்றார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்… தமிழக முதலமைச்சர் வழிக்காட்டலின் படி அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் இன்று தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் தன்னிறைவு பெறும் வகையிலும் அரசின் திட்டங்கள் அந்த அந்த பள்ளிக்கு கொண்டு செல்லும் வகையிலும் கண்காணிக்கும் வகையிலும் இது செயல்படுத்தப்பட உள்ளது. அரசுக்கு மாணவர்களும் முக்கியம், ஆசிரியர்களும் முக்கியம். மாணவர்கள் தவறு செய்தால் அவர்கள் நிச்சயம் கண்டிக்கப்படுவார்கள். மாணவர்கள் எவ்வாறு பள்ளிக்கு வர வேண்டும் என்கிற அரசாணை ஏற்கனவே இருக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இது குறித்து முக்கியமாக வலியுறுத்தி தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஹிஜாப் பிரச்சனை என்பதெல்லாம் இல்லை. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம். பணியிட மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் உணர்வுகள் மதிப்பளிக்கப்படும். பிப்ரவரி 28 ஆம் தேதி முடிவடைய வேண்டிய ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்போது வரை நடந்து வருகிறது. ஆசிரியர்கள் கருத்துகள், அவர்களின் கோரிக்கைகள் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் தொடங்கப்பட்டாலும் மாணவர்களுக்கு கற்றல் குறைவு இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே தான் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் சிறப்பாக கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற உள்ளார்கள். தமிழ் நாட்டில் 1,78,000 மையங்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. எனவே தான் மாணவர்களுக்கு வாசிப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு நடத்த தயார் நிலையில் இருக்கிறோம் என்றார். இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *